உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து விபத்து.. 6 பேரை காணவில்லை! மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷாக்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேரை காணவில்லை. எனவே தேடும் பணியை மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புனே மாவட்டத்தில் உள்ள கலாஷி கிராமத்தில் உஜ்ஜைனி அணை அமைந்திருக்கிறது. இந்த அணையின் நீர் நிலைகளை ஒட்டி சில கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராம மக்கள் வெளி ஊர்களுக்கு செல்ல படகு மூலம்தான் பயணிக்கிறார்கள். கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க கிராம மக்கள் தினமும் படகு மூலம் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

நேற்று மாலையும் இப்படி வெளியூருக்கு சென்று திரும்பும்போது உள்ளூர் மக்கள் வந்த படகு ஒன்று கவிழ்ந்திருக்கிறது. படகில் மொத்தம் 7 பேர் பயணித்ததாகவும், ஒருவர் மட்டும் பத்திரமாக நீச்சலடித்து கரை சேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
தேடுதல் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக படகு கவிழந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தின் மானேர் மாவட்டத்தில் உள்ள மகாவீர் தோலா கிராமத்தில் கங்கை ஆற்றில் மே 19ம் தேதி படகு கவிழ்ந்தது. இந்த கிராமத்திற்கு வரவேண்டும் எனில் படகு மூலமாகத்தான் வர முடியும். எனவே தினமும் இங்குள்ள விவசாயிகள் படகு மூலம் ஆற்றை கடந்து காய்கறிகளை கொண்டு சென்று விற்பதுண்டு. அதேபோல மே 19ம் தேதி காலையும் 10-12 விவசாயிகள் ஆற்றை கடந்திருக்கிறார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்திருக்கிறது. இதில் 10 பேர் வரை நீந்தி ஆற்றை கடந்திருக்கிறார்கள். 2 பேர் மட்டும் காணவில்லை. எனவே இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாநில பேரிடர் மீட்பு படையினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் 2 பேரை சடலமாக மீட்டனர்.
இந்த விபத்து குறித்து அவர்கள் கூறுகையில், “காலை 7-8 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. படகில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற விவசாயிகள் இதில் சிக்கியிருக்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்டவுடன் நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டோம். 2 பேரை சடலமாக மீட்டோம்” என்று கூறியுள்ளனர்.
இதற்கும் முன்னதாக மே 9ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையில் 2 பேர் காணாமல் போயினர். இந்த படகில் மொத்தம் 9 பேர் பயணித்திருக்கின்றனர். இதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 2 பேரை காணவில்லை.
கடந்த மாதம் இதேபோன்று கந்த்பால் பகுதியில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 15 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த சோக சம்பவம் நடந்தது. இப்படியாக தொடர் படகு விபத்து சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications