உலகுக்கு சப்ளை செய்யும் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு.. மும்பையில் 71 தடுப்பூசி மையங்கள் மூடல்!
மும்பை: மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 71 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மகாராஷ்டிரா அதன் மக்கள்தொகைக்கு குறைவான தடுப்பூசி அளவுகளையே பெறுகிறது என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. இதிலும் மகாராஷ்டிராவில் தினமும் 50,000-க்கும் மேல் பாதிப்பு பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் தினமும் 5,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன.

தடுப்பூசி தட்டுப்பாட்டால் 71 மையம் மூடல்
இந்த நிலையில் மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 71 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் மிக முக்கிய வணிக தளமான பி.கே.சியில் உள்ள தடுப்பூசி மையமும் மூடப்பட்டு உள்ளதால் தடுப்பூசி போட வந்தவர்கள் வெளியே காத்துக் கிடக்கின்றனர். ''நேற்றிரவு நாங்கள் நிறைய டோஸ் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம், ஆனால் அது வரவில்லை. இப்போது எங்களிடம் 160 டோஸ் மட்டுமே உள்ளது'' என்று தடுப்பூசி மையத்தின் டீன் ராஜேஷ் தேரே தெரிவித்தார்.

76,000 தடுப்பூசிகள் வரவுள்ளன
மும்பையில் மட்டும் 120 கொரோனா தடுப்பூசி மையங்கள் உள்ளன. இதில் 71 மையங்களில் தடுப்பூசி தீர்ந்து அவை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. 120 மையங்களில் 49 மையங்கள் மும்பை மாநகராட்சியால் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், 'இப்போது பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் இல்லை. இதனால் தடுப்பூசி அங்கு நிறுத்தப்பட்டுள்ளது ... சுமார் 76,000 முதல் 1 லட்சம் வரையிலான தடுப்பூசி அளவுகள் இன்று மும்பைக்கு வரப்போகின்றன என்று கூறுகிறார்கள். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை'' என்று கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மகாராஷ்டிரா அதன் மக்கள்தொகைக்கு குறைவான தடுப்பூசி அளவுகளையே பெறுகிறது என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் ஒரு நாளைக்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ள மகாராஷ்டிராவுக்கு வாரத்திற்கு 40 லட்சம் டோஸ் மற்றும் ஒரு மாதத்திற்கு 1.6 கோடி தடுப்பூசிகள் தேவை என்றும் ராஜேஷ் டோப் கூறினார்.












Click it and Unblock the Notifications