சாப்பிடும் போது கைதான மத்திய அமைச்சர்.. 8 மணி நேரத்துக்கு பின் ஜாமீன் பெற்றார் நாராயண் ரானே
மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று இரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன் ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் ரானேவுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சிவசேனாவுக்குள் பலவீனமானர்களை குறி வைத்து பாஜகவின் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் அரசியல் நகர்ந்து வருகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவை பலவகைகளில் சரமாரியாக தாக்கி பேசி வந்தார் நாராயண் ரானே.
சில தினங்களுக்கு முன்புகூட, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மீண்டும் நாராயண் ரானே ஆட்சேபனைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்..

வெட்கம்
"சுதந்திர ஆண்டை முதல்வர் உத்தவ் தாக்கரே அறியாதது வெட்கக்கேடானது... அவர் தனது உரையின் போது சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று உதவியாளரிடம் கேட்டு அப்புறம் சொல்கிறார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால், (அவருக்கு) ஒரு அறை கொடுத்திருப்பேன்" என்று தன்னுடைய மக்கள் ஆசிர்வாதம் பயணத்தின்போது பேசியிருந்தார்.

கண்டனம்
இதற்கு சிவசேனா கடுமையான ஆட்சேபனை தெரிவித்து கொந்தளித்தது.. அக்கட்சி தொண்டர்கள் ஆவேசமானார்கள்.. அவரை கோழிதிருடர் என்று ஊரல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டி விமர்சித்தனர்... பல வருடங்களுக்கு முன்பு நாராயண ரானே, கறிகடை வைத்திருந்ததை வைத்து இப்படி செய்திருக்கிறார்கள் என்றே கருதப்பட்டது.

தாக்கரே
பால் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் அரசியல் பயணத்தை ஆரம்பித்ததையும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் செம்பூரில் கோழிக்கடை நடத்தி வந்ததை விமர்சிக்கும் வகையிலும், மும்பை மற்றும் இதர பகுதிகளில் கோழித் திருடன் என்று நாராயன் ரானேவை விமர்சித்து அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டினர்.. மேலும் அவரது வீட்டை நோக்கி பேரணியாக சென்று சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

எப்ஐஆர்
இப்படிப்பட்ட சூழலில்தான், யுவ சேனா புகார் ஒன்றினை தந்துள்ளதையடுத்து, நாராயண் ரானேவுக்கு எதிராக புனேவில் சதுர்ஷிரிங்கி போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது... ஐபிசி பிரிவு 505-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நாராயண் ரானே விரைவில் கைது செய்யப்படலாம் என்று நேற்று காலை முதலே தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.

புகார்
ஆனால், தன் மீது போடப்பட்ட எப்ஐஆர்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாராயண் ரானே மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், போலீசார் இதுபற்றி எவ்வித தகவலையும் காலையில் இருந்து தெரிவிக்காமல் இருந்தது.. கொங்கன் பகுதியில் இருக்கும் சிப்லனின் அவர் இருப்பதாக தகவல் அறிந்து நாசிக் போலீசார் ஒரு குழுவினர் அங்கு விரைந்திருந்தனர். இறுதியில், அமைச்சர் நாராயண் ரானேவை சதுர்ஷிரிங்கி போலீசார் நேற்று மதியம் கைது செய்துள்ளது..

சாப்பாடு
அப்போது, மத்திய அமைச்சர் நாராயண் ரானே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... எனினும் அவர் கைது செய்யப்பட்டு போலீஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டார். அப்போது அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவியது.. ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு, பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜாமீன்
20 ஆண்டுகளில் கைது செய்யப்படும் முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே என்பதால் தேசிய அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது. பின்னர், சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன் ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர்... உடல்நிலையை காரணம் காட்டி, ரானேவுக்கு ஜாமீன் கோரப்பட்டது.. அவரை 7 நாட்கள் காவலில் வைக்குமாறு மகாராஷ்டிரா காவல்துறை கோரியது. ஆனால் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணைக்கு பின் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications