தயாரிப்பாளரின் காதை கடித்து விழுங்கிய நண்பர்.. ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு ஓடிய சோகம்
மும்பை: பார்ட்டியில் ஏற்பட்ட பிரச்சனையில் நண்பர் ஒருவர் சினிமா தயாரிப்பாளரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹிரந்தனி எஸ்டேட் பட்லிபடா பகுதியில் வசித்து வருபவர் ஷரவண் லீகா (வயது 37). இவர் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் விகாஸ் மேனன் (வயது 32). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஒரே இடத்தில் வசிப்பதால் இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாகினர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஷரவண் லீகா, விகாஸ் மேனன் ஆகியோர் தங்களின் வேறு 2 நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்றனர்.
பார்ட்டியில் வைத்து திடீரென்று ஷரவண் லீகா மற்றும் விகாஸ் மேனன் ஆகியோர் இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதம் செய்தனர். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி கைக்கொடுக்கவில்லை. மேலும் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது கோபத்தின் உச்சிக்கு போன விகாஸ் மேனன் திடீரென்று ஷரவண் லீகாவின் காதை கடித்தார். அப்போது ஷரவண் லீகாவின் பாதி காது துண்டானது. அதனை வெளியே துப்பாத விகாஸ் மேனன் அப்படியே விழுங்கினார். இதனால் ஷரவண் லீகாவின் காதில் இருந்து ரத்தம் சொட்டியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.
உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு ஷரவண் குமார் காசர்வடவள்ளி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பார்ட்டிக்கு பிறகு ஏற்பட்ட பிரச்சனையில் நண்பரே, சினிமா தயாரிப்பாளரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications