சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கம்.. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ. 7 கோடி சொத்துகள் முடக்கம்!
மும்பை: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ 7.12 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தொழிலதிபரான இவர் அரசியல்வாதிகளையும் தெரியும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என கூறிக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்த போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது ஆர் கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரனிடம் சுகேஷ் 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு முதலில் ரூ 2 கோடி அட்வானஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இரட்டை இலைக்கு லஞ்சம்
இந்த வழக்கில் தினகரன் ஜாமீனில் உள்ளார். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் உள்ளார். இவர் சிறையில் இருந்து கொண்டே ரூ 200 கோடி பண மோசடி செய்ததாக டெல்லி பொருளாதார குற்றவியல் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்ஸை விசாரித்து வருகிறார்கள்.

ரூ 10 கோடிக்கு பரிசு
முதற்கட்டமாக நடந்த விசாரணையில் சுகேஷ் யாரென்றே தனக்கு தெரியாது. அவருடன் நான் டேட்டிங்கில் இருந்ததில்லை என தெரிவித்திருந்தார். ஆனால் சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும் மோசடி செய்த பணத்தில் நடிகை ஜாக்குலினுக்கு ரூ 10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை சுகேஷ் வழங்கியதாக தெரிகிறது.

ரூ 52 லட்சம் மதிப்பிலான குதிரை
ரூ 52 லட்சம் மதிப்பிலான குதிரை, 9 லட்சம் மதிப்பிலான 4 பெர்சியன் பூனைகள், விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள், வைர நகைகள் உள்ளிட்டவைகளும் அந்த ரூ 10 கோடியில் அடங்கும் என தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் சுகேஷ் யாரென்றே தெரியாது என ஜாக்குலின் கூறிய நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ரிலீஸானதால் விசாரணையின் பிடி இறுகியது.

நடிகை ஜாக்குலின் சொத்துகள் முடக்கம்
இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ 7.12 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மோசடி செய்த பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசுகளை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது போல் சுகேஷுடன் தொடர்பில் இருந்த நேஹா பதேஹி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு எதிராகவும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை பாயும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications