மும்பையின் மின் கட்டமைப்பில் புதிய மைல்கல்.. அசத்தும் அதானி எனர்ஜி நிறுவனம்! இனி மின்வெட்டு இருக்காது
மும்பை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL) நிறுவனம், மும்பையில் புதிய மின் விநியோக பாதையை இயக்கி உள்ளது. குடூஸ் முதல் ஆரே வரையிலான இந்த உயர் மின்அழுத்த நேரடி மின்சார (HVDC) வழித்தடம் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்டது. இது மும்பையின் மின் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. மேலும், மாநகரப் பகுதிக்கு தேவையான மின்சாரம் கிடைக்க உறுதி செய்கிறது. AESL-இன் துணை நிறுவனமான அதானி எலெக்ட்ரிசிட்டி மும்பை இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (AEMIL) இதை செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில் சுமார் 30 கிலோமீட்டர் வான்வழிப் பாதை வழியாகவும், 50 கிலோமீட்டர் நிலத்தடிப் பாதை வழியாகவும் மின்அழுத்த கம்பிகள் செல்கின்றன. இதுதவிர நகர்ப்புறத் தேவைகளுக்கென பிரத்யேகமாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறைந்த இடத்திலேயே அதிக மின்சார திறனை வழங்க உதவுகிறது. இது உலகிலேயே முதல் HVDC துணை மின்நிலையம் ஆகும்.
கடந்த 2020 அக்டோபரில் மும்பையில் அதிகளவில் மின்வெட்டு நடந்தது. இதுதான் இந்த திட்டத்துக்கு வழிவகுத்தது. ஏனென்றால் அப்போது நடந்த மின்வெட்டு மும்பை நகர மின் விநியோக அமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியது. அந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளவே இந்த வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மும்பைக்கு சீரான மின்விநியோகத்தை வழங்கும்.
மும்பையின் மின் விநியோகம் வலுவடைதல்
இந்த HVDC இணைப்பு கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது. இது மின்சார துறையின் மீதான நம்பகத்தன்மையை கணிசமாக அதிகரிக்கிறது. இதனால், நகரில் ஏற்படும் மின்வெட்டு அபாயங்கள் பெருமளவு குறைகின்றன. நகருக்குள்ளேயே மின் உற்பத்தியைச் சார்ந்திருக்கும் நிலையும் குறைகிறது. அதேபோல் HVDC இணைப்பு மூலம், மும்பை வெளியிலிருந்து அதிக மின்சாரத்தைப் பெற முடியும். இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் சேர்க்கப்படும். இது மும்பை மாநகரில் பெருகி வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
அதிநவீன HVDC தொழில்நுட்பம்
இந்தத் திட்டம், VSC அடிப்படையிலான HVDC தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மின் ஓட்டங்களை விரைவாகவும், துல்லியமாகவும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மின்னழுத்த உறுதித்தன்மை மேம்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த மின் கட்டத்தின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கிறது.
மின்தடங்கலில் ஆட்டோமெட்டிக்
HVDC இணைப்புக்கு 'பிளாக்-ஸ்டார்ட்' திறன் உள்ளது. மின் தடங்கலின் போது வெளிப்புற உதவி இன்றி மின்சாரத்தை மீண்டும் கொண்டு வரும். இது மும்பையின் மின் அமைப்பை மேலும் வலிமையானதாக்குகிறது. எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் இதற்கு உண்டு.
குடூஸ் - ஆரே மின் இணைப்பு உலகிலேயே முக்கியமான மைல்கல்லாக இருக்கும். ஏனென்றால் இது மிகப்பெரிய நகர்ப்புற HVDC மின் விநியோக இணைப்புகளில் ஒன்று. இத்திட்டம் மும்பையின் மின் அமைப்பை தூய்மையாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும்.
தலைமை செயல் அதிகாரி பெருமை
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் தலைமைச் செயல் அதிகாரி கந்தர்ப் படேல் இதுபற்றி பேசினார். அவர் கூறுகையில், "இந்த மின் விநியோகப் பாதை மும்பைக்கு ஒரு நவீன மின் வழித்தடத்தை வழங்குகிறது. இது அதிக நம்பகத்தன்மையுடன் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒன்றிணைத்து, மின் கட்டத்தின் நிலைத்தன்மையையும் மின் பாதுகாப்பையும் பலப்படுத்தும்." என்றார்.












Click it and Unblock the Notifications