புதிய சாதனை படைத்த அதானி நிறுவனம்.. கிரீன் எனர்ஜி உற்பத்தியை 5 ஜிகாவாட் வரை அதிகரிக்க சூப்பர் சான்ஸ்
மும்பை: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 5.051 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை (Renewable Energy) சேர்த்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு திறன் 19.3 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது சீனாவிற்கு வெளியே உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வருடாந்திர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட 5,051 மெகாவாட் திறனில், 3,409 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களாகவும், 686 மெகாவாட் காற்றாலை திட்டங்களாகவும், 956 மெகாவாட் சூரிய மற்றும் காற்றாலை கலப்பு திட்டங்களாகவும் உள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் டன் கார்பன் உமிழ்வு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறன் ஆண்டுக்கு 36 மில்லியன் டன் உமிழ்வைக் குறைக்க உதவும்.
புதிய திறன் சேர்க்கைகளில் பெரும்பகுதி குஜராத்தில் அமைந்துள்ள காவ்டா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தில் (Khavda Renewable Energy Project))உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆலையாக உருவாகி வரும் இந்தத் திட்டம், 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. உலகளாவிய அளவில் மிகவும் லட்சியமான தூய்மை ஆற்றல் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
2029 ஆம் ஆண்டிற்குள் காவ்டாவில் 30 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டத்தை நிறுவ அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், ஏற்கனவே 9.4 ஜிகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் இந்தியாவின் தூய்மை ஆற்றல் மாற்றத்திற்கான (Global Clean Energy Transition)உலகளாவிய தலைமைத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அதானி கிரீன் எனர்ஜியின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்த மைல்கல் இந்தியாவின் உலகளாவிய தூய்மை ஆற்றல் மாற்றத்தில் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை பிரதிபலிக்கிறது. மேலும், குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கிய நாட்டின் நகர்வை பலப்படுத்துகிறது" என்றார். நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள் 50 ஜிகாவாட் திறனை அடையும் நீண்டகால இலக்கை நோக்கிய முன்னேற்றத்தையும் இது உறுதிப்படுத்துகிறது.
காவ்டா தளத்தில் 1,376 மெகாவாட் மணிநேர பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை அதானி கிரீன் எனர்ஜி எட்டு மாதங்களுக்குள் நிறுவியுள்ளது. இது மின் கட்டத்தின் நிலைத்தன்மையையும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும். இருபுறமும் ஆற்றல் உற்பத்தி செய்யும் இருமுக சூரிய மின்தகடுகள், செயல்திறன் மிக்க சூரிய டிராக்கர்கள், 5.2 மெகாவாட் காற்றாலை விசையாழிகள் (Wind Trubines) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இத்திட்டம் பயன்படுத்துகிறது. நீர் இல்லாத ரோபோடிக் அமைப்புகள் சூரிய மின்தகடுகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுவதால், நீர் நுகர்வைக் குறைத்து செயல்பாட்டுத் திறன் மேம்படுகிறது.
அதானி கிரீன் எனர்ஜி அதன் நிலைத்தன்மை முயற்சிகளுக்காக உலக அளவில் பாராட்டப்பட்டுள்ளது. எனர்ஜி இன்டெலிஜென்ஸ் (Energy Intelligence) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான குளோபல் டாப் 100 பசுமைப் பயன்பாடுகள் (Global Top 100 Green Utilities) பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும், என்எஸ்இ நிலைத்தன்மை மதிப்பீடுகளின்படி (NSE Sustainability Ratings), அதானி கிரீன் எனர்ஜி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் மின்சாரத் துறையில் சிறந்த நிலைத்தன்மை செயல்திறன் கொண்ட நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், நாட்டின் கார்பன் வெளியேற்ற இலக்குகளுக்கு முக்கிய பங்காற்றும் வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கத்தை முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications