எடப்பாடியாகும் ஏக்நாத் ஷிண்டே.. பன்னீர் நிலையில் உத்தவ் தாக்கரே! சிவசேனாவில் அதிமுக மாடல்
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பை கொடுத்தது தமிழ்நாட்டில் அதிமுகவில் ஏற்படுத்திய மாடலை சிவசேனாவிலும் கொண்டுவரும் திட்டமாக இருக்குமோ என்று எண்ணம் அங்கு நடைபெற்று வரும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரியவருகிறது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜகவுக்கு 106 இடங்கள் கிடைத்தன. பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த ஜூன் 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்தடுத்து சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்ததால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது.

உத்தவ் தாக்கரே ராஜினாமா
இதனை தொடர்ந்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரேவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆளுநரின் நோட்டீசை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தனது கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே
இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார். அப்போதே சிவசேனா கட்சியையும் ஏக்நாத் ஷிண்டே அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்காக அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக கணிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள், எம்.பிகள்
இதனை மெய்பிக்கும் வகையில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றதை சில நாட்களில் சிவசேனா கட்சியின் நகராட்சி, ஊராட்சி உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த 19 எம்பிக்களில் 12 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்பிக்களின் அழுத்தம் காரணமாகவே சிவசேனா திரௌபதி முர்முவை ஆதரித்ததாக செய்திகள் வெளியாகின.

அதிமுக மாடல்
இப்படி ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானதன் மூலம் கட்சியிலும் அதிகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதேபோல்தான் அதிமுகவிலும் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்கு பின் அக்கட்சியில் சக்தி வாய்ந்தவர்களாக பார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு குறையத் தொடங்கியது. கட்சித் தலைமை ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தாலும் மாநிலத்தின் உட்சபட்ச அதிகாரமாக விளங்கிய எடப்பாடி பழனிசாமி, அனைவரையும் விட அதிக செல்வாக்கை பெற்றார்.

எடப்பாடியாகும் ஏக்நாத் ஷிண்டே
இதன் காரணமாகவே கட்சித் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் அணி திரண்டனர். முதலமைச்சராக இருந்தபோதே மாவட்டச் செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் பெரும்பாலானோரை தன்வசம் அவர் ஈர்த்துக்கொண்டார். சசிகலா, தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏக்கள், ஆதரவாளர்களும் காலப்போக்கில் எடப்பாடி அணியில் சாய்ந்தனர். தர்ம யுத்தத்தின்போது ஓபிஎஸ் உடன் இருந்தவர்கள் தற்போது எடப்பாடியுடன் இருக்கிறார்கள். இப்படி அசைக்க முடியாத சக்தியாக அதிமுகவில் எடப்பாடி உருவானதைபோல் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவை மாற்றும் முயற்சிகள் ஜோராக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications