அண்ணாமலை சொன்ன ஒரே ஒரு கருத்து! "மும்பை மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது இல்லை!" பெரிதாக வெடித்த சர்ச்சை
மும்பை: மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்து வரும் அண்ணாமலை, மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானது இல்லை எனச் சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது இந்தக் கருத்துக்கு மகாராஷ்டிரா பாஜக விளக்கமளித்தாலும் கூட அதை ஏற்க மறுத்துள்ள தாக்கரே சிவசேனா இது தொடர்பாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சாடியுள்ளது.
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு உள்ளாட்சித் தேர்தலில் பல முனைப் போட்டி நிலவும் சூழலில், பல்வேறு கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி அங்குள்ள தமிழர்களிடம் பிரச்சாரம் செய்ய மாஜி தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மும்பை சென்றுள்ளார்.

அண்ணாமலை
அங்கு பாஜகவுக்காக வாக்கு சேகரித்த அவர் மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ஒரு கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது மும்பை மகாராஷ்டிராவின் நகரம் அல்ல.. அது ஒரு சர்வதேச நகரம் அண்ணாமலை கூறியதே சர்ச்சையாக வெடித்துள்ளது. அண்ணாமலையின் இந்தக் கருத்தை தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
மகாராஷ்டிராவின் நகரம் இல்லை
மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவி, சியான்-கோலிவாடா எனத் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "மும்பை மகாராஷ்டிராவின் நகரம் அல்ல.. அது ஒரு பன்னாட்டு நகரம்! மும்பையின் பட்ஜெட் மட்டும் சுமார் ₹75,000 கோடி. ஒப்பீட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை பட்ஜெட் ₹8,000 கோடி, பெங்களூர் பட்ஜெட் ₹19,000 கோடியாகவே பட்ஜெட் இருக்கிறது" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரைப் புகழ்ந்த அண்ணாமலை, மும்பை வளர்ச்சிக்கு மூன்று இன்ஜின் அரசு அவசியம் என்றார். அதாவது மத்திய- மாநில அரசுகளில் பாஜக பவரில் இருக்கும் நிலையில், உள்ளாட்சியிலும் பாஜகவே பவருக்கு வர வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டைப் பார்த்தோம் என்றால் அங்கு மாநிலத்தில் திமுகவும் மத்தியில் பாஜகவும் உள்ளது. தெலுங்கானாவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் அரசுகள் உள்ளன. ஆனால், இங்கு அப்படி இல்லை. இது மேலும் விரிவடைந்து 3 இன்ஜின் அரசாகவும் உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது" என்றார்.
சர்ச்சை
இதில் அண்ணாமலை மும்பை குறித்துக் கூறிய கருத்துகளே சர்ச்சையாக வெடித்துள்ளது. மராத்தி அடையாளம் என்பது மும்பை உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய விஷயமாகியுள்ளது. பல்வேறு கட்சிகளுமே மராத்தி அடையாளம் குறித்துப் பேசி வருகிறார்கள். இந்த நேரத்தில் அண்ணாமலை இப்படிப் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு தாக்கரே சிவசேனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவுத் கூறுகையில், "தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு வந்து.. மும்பை மகாராஷ்டிராவிற்குச் சொந்தமில்லை என்று அண்ணாமலை கூறியது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மவுனமாக வேறு இருக்கிறார்கள்.
கடும் தாக்கு
உண்மையாகவே மகாராஷ்டிராவிற்காக நின்றிருந்தால், ஷிண்டே இந்த அவமரியாதையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள். பட்னாவிஸ் மற்றும் ஷிண்டேவிடம் நான் கேட்கிறேன்... மும்பை மகாராஷ்டிராவிற்குச் சொந்தமில்லையென்றால், அது யாருக்குச் சொந்தம்? இதுபோன்ற கருத்துகள் மகாராஷ்டிரா மக்களையும், மராத்தியப் பெருமையையும் அவமதிக்கின்றன. அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கிடையே அண்ணாமலையின் கருத்து தொடர்பாக மகாராஷ்டிரா பாஜக விளக்கமளித்துள்ளது. மும்பையை அவமதிக்கும் நோக்கில் அண்ணாமலை இந்தக் கருத்துகளைக் கூறவில்லை என்றும் மும்பையைப் பெருமைப்படுத்தவே அவர் இந்தக் கருத்தைக் கூறியதாக பாஜக விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications