ATM-களில் பணம் எடுக்கும் கட்டணம் உயர்கிறது ! ரிசர்வ் வங்கி அறிவிப்பு! எப்போது முதல் அமல்?
மும்பை: ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி வரும் காலங்களில் நாம் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். ஏனென்றால் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கட்டணம் எவ்வளவு தூரம் உயரும்.. எப்போது முதல் உயரும் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
என்ன தான் நமது நாட்டில் யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என ஏகப்பட்ட வசதிகள் வந்தாலும் கூட இன்னுமே ரொக்கம் தான் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்னுமே நகரங்களைத் தாண்டி ஊர் பக்கம் போனால் பல இடங்களில் ரொக்கத்தை மட்டுமே வாங்குவார்கள். இதனால் கைவசம் பணம் வைத்திருப்பது முக்கியமானதாக இருக்கிறது.

எப்போது முதல் உயரும்
கிட்டதட்ட அனைவருமே நமக்கு தேவைப்படும்போது ஏடிஎம்களில் தான் பணம் எடுப்போம். இதற்கிடையே ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் மே 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் சூழலில், அதன் பிறகு பணம் எடுக்கக் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் ஏடிஎம் சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி தனியார் நிறுவனங்களையும் ஏடிஎம்களை ஆப்ரேட் செய்ய அனுமதி அளித்திருந்தது. அதன்படி டாடா, இந்தியா1 உள்ளிட்ட நிறுவனங்கள் ஏடிஎம்களை ஆப்ரேட் செய்து வருகிறார்கள். செலவுகளை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என இந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
ரிசர்வ் வங்கி
இந்த கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வரும் மே 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. எனவே, இதற்கு மேல் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்க நாம் அதிக கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கும். சரி, யாருக்குக் கட்டணம் உயரும்.. எவ்வளவு உயரும்?
ஒரு முறை பணம் எடுத்தாலே நாம் அதிக கட்டணம் செலுத்தத் தேவையில்லை.. இப்போது ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை மட்டுமே உயர்த்தியுள்ளது. ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் என்பது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், மற்றொரு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது செலுத்தும் கட்டணமாகும்.
யாருக்குச் சிக்கல்
அதாவது நீங்கள் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர் என வைத்துக் கொள்வோம். நகர் பகுதியில் வசிக்கும் நீங்கள் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது முதல் 3 முறை கட்டணம் இல்லை. ஆனால், 4வது முறை பணம் எடுக்கும் போது நீங்கள் தனி கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பரிமாற்ற கட்டணத்தைத் தான் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
எவ்வளவு உயர்கிறது?
அதன்படி மே 1ம் தேதி முதல் இலவச வரம்பைத் தாண்டிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பணம் எடுக்கும் நிதி பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல நிதி அல்லாத பரிவர்த்தனைகள் (இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் போன்றவை) ஒரு பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் கட்டணம் ரூ.6ல் இருந்து ரூ.7ஆக உயர்த்தப்படுகிறது.
எத்தனை பரிவர்த்தனைகள் இலவசம்
நீங்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வசித்தால் 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். அதன் பிறகான ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம் மற்ற ஊர்களில் வசிப்போருக்கு 5 பரிவர்த்தனைகள் இலவசமாகக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications