சல்மான் கானை மிரட்டிய அதே "தாதா".. பாபா சித்திக் கொலைக்கு பின் மும்பை ரவுடி "லாரன்ஸ்".. யார் இவர்?
மும்பை: என்சிபி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொலையில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும், தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பாந்த்ராவில் (கிழக்கு) நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகிலுள்ள அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்தில் பாபா சித்திக் இருந்தார். எம்எல்ஏ அலுவலக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின் இரவு 9.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியேறினார்.

வெளியே வந்த சில நிமிடங்களில் பாபா சித்திக்கை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்த மூன்று பேர், தங்கள் காரில் இருந்து இறங்கி பாபா சித்திக்கை சுட்டு உள்ளனர். அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்த நிலையில்.. சரியாக அந்த நேரத்தில் பாபா சித்திக் மீது மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தவர்.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளான ஹரியானாவைச் சேர்ந்த கர்னைல் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, தற்போது தாங்கள் சிறையில் உள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
கொலை செய்யப்பட்ட விதம்.. பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.. ஆகியவை மூலம் இது கான்டராக்ட் கொலை என்பதை குறிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த கொலைக்காக கடந்த 25-30 நாட்களாக அப்பகுதியில் இவர்கள் நோட்டமிட்டு பாபா சித்திக்கை கண்காணித்து இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நபர்களை போலீசார் கைது செய்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் நேரடியாக தொடர்புடைய மூன்றாவது குற்றவாளி தலைமறைவாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஆட்டோ ரிக்ஷாவில் துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் காத்திருந்து சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தகவல் அளித்து வந்த மற்றுமொரு நபரும் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
லாரன்ஸ் பிஷ்னோய்: தற்போது தாங்கள் சிறையில் உள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. லாரன்ஸ் பிஷ்னோய் மும்பையில் உள்ள பிரபல ரவுடிகளில் ஒருவர்.
இவர் ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர்தான் இப்போது பாபா சித்திக் கொலை வழக்கிலும் மாட்டி உள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அரசியல், மத கோணத்தையும் ஆய்வு செய்ய உள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் காங்கிரஸுடனான தனது 40 வருட கால உறவை முறித்துக்கொண்டு அஜித் பவார் தலைமையிலான என்சிபியில் இணைந்தார் பாபா சித்திக். 15 நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் அவருக்கு விடுக்கப்பட்ட நிலையில்.. போலீசார் பாதுகாப்பு உயர்த்தப்பட்டது. அதேபோல் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்த நிலையில் அதை பயன்படுத்திக்கொண்டு சித்திக் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications