இந்தியாவைவிட வங்கதேசம் முன்னேறிவிட்டது.. மதவெறுப்பு அரசியல விடுங்க! - காங்கிரஸ் தலைவர் நானா படோலே
மும்பை: இந்தியாவின் நாணய மதிப்பு வங்கதேசத்தை விட பின் தங்கிவிட்டதாகவும் இந்திய மக்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் எனவும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோலே தெரிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்திரகாந்த் பாட்டில் ஜாதவ் கடந்த 2021 டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலமானார்.
இதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த எம்.எல்.ஏ. சந்திரகாந்த் பாட்டில் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ பாட்டில் நிறுத்தப்பட்டார். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆளும் சிவசேனா கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை
பாஜக சார்பில் சத்யஜித் கடம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் வேட்பாளராக இந்த தொகுதியில் போட்டியிட்டனர். ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்து முடிந்த வாக்குப்பதிவில் 61.19% வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ்
இதில் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயஸ்ரீ பாட்டில் பாட்டில் பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் பாஜக வேட்பாளரை விட 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

வங்கதேச நாணய மதிப்பு
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, "பாஜக ஆட்சி அமைத்து நாட்டை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்லும் என்று இந்திய மக்கள் நம்பி வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைத்தார்கள். ஆனால், தற்போதைய நிலையில், நமது நாட்டின் நாணயத்தை விட வங்கதேசத்தின் நாணய மதிப்பு அதிகரித்துவிட்டது."

மதவெறுப்பு அரசியல் வேண்டாம்
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பாங்கு சொல்வதற்காக பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள நானா படோலே, "ராஜ் தாக்கரேவின் கட்சி மதவெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications