சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுத்தால்.. அந்த விருதுக்கே பெருமை சேரும்! RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு
மும்பை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது விருதுக்கே பெருமை சேர்க்கும் என்று கூறியிருக்கிறார். சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. இந்நிலையில், மீண்டும் இந்த கோரிக்கையை மோகன் பகவத் வலியுறுத்தி இருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சாவர்க்கர் மக்களின் பாராட்டைப் பெற்றவர் என்பதால், இந்த விருது அதன் மதிப்பை மேலும் அதிகரிக்கும் என மோகன் பகவத் கூறியுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற 'RSS சங்கத்தின் நூற்றாண்டுப் பயணம் - புதிய அடி வானங்கள்' நிகழ்வில் அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

ஏன் தாமதம்?
விருது வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பேசிய பகவத், "நான் அந்தக் குழுவில் இல்லை. ஆனால், எனக்கு தெரிந்தவர்கள் அங்கு இருந்தால்.. ஏன் தாமதமாகிறது என்று கேட்பேன். சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டால், அது விருதுக்கே பெருமை சேர்க்கும், மதிப்பும் உயரும். எந்த அங்கீகாரமும் இல்லாமலேயே அவர் மக்களின் மனங்களில் வாழ்பவர்" என்றார்.
கருணை மனு
சாவர்க்கருக்கு உயரிய குடிமை விருதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் விவாதமாக மாறியிருக்கிறது. பல தலைவர்கள் இதை ஆதரித்தாலும், காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சாவர்க்கர் சமர்ப்பித்த கருணை மனுக்களை சுட்டிக்காட்டி, அவரை துரோகி என்று காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது.
பாஜகவின் வலியுறுத்தல்
மறுபுறம், பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என அவரது பங்களிப்புகளை இரு கட்சிகளும் சுட்டிக் காட்டியுள்ளன.
விளம்பரம் எனும் மழை
மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் தத்துவம் குறித்தும் பகட்டு விளம்பரம் குறித்தும் பேசியிருந்தார். "அதிகப்படியான பகட்டு விளம்பரம் ஆணவத்துக்கு வழிவகுக்கும். அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். விளம்பரம் என்பது மழையை போன்றது. அது சரியான நேரத்தில், சரியான அளவில் இருக்க வேண்டும் என்றார்.
மொழி விஷயத்தில் நிலைப்பாடு
ஆர்எஸ்எஸ்-க்குள் மொழி பற்றியும் பகவத் பேசினார். ஆங்கிலம் இந்திய மொழி இல்லாததால், அமைப்பின் செயல்பாடுகளின் தொடர்பு ஊடகமாக அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றார். தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்பட்டாலும், சங்கத்திற்கு மையமான தொடர்பு முறை அல்ல எனத் தெளிவுபடுத்தினார். "நாங்கள் இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆங்கிலம் தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்த தயாராக உள்ளோம்," என்று அவர் கூறினார்.
இருமொழிக் கொள்கை
மொழித்திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "சொந்த மொழி பேசுபவர்கள் விரும்பும் வகையில் மக்கள் ஆங்கிலம் பேசத் தெரிய வேண்டும்" என்றார். அதே வேளையில், தாய்மொழிகளைப் பாதுகாக்கும் அவசியத்தையும் அடிக்கோடிட்டு, "நாம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற வேண்டும், ஆனால் தாய்மொழியை மறக்கக்கூடாது" என்றார்.
பெங்களூரில் நடந்த சந்திப்பை நினைவு கூர்ந்த பகவத், பல தென் மாநிலப் பிரதிநிதிகளுக்கு விவாதத்தின் போது இந்தி புரிந்துகொள்வதில் சிரமம் இருந்ததாகக் கூறினார். பயனுள்ள தொடர்பை உறுதி செய்ய, அவர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்ததாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications