அடுத்த சிக்கல்! மகாராஷ்டிராவில் செத்து மடியும் கோழிகள்.. பறவை காய்ச்சலால் 25,000 கோழிகள் அழிப்பு
மும்பை: நாட்டில் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் சூழலில், மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களாக ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் 3ஆம் அலையை ஏற்படுத்தியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 3 லட்சம் வரை கூட சென்றது.
சில வாரங்கள் உச்சத்தில் இருந்து ஓமிக்ரான் கொரோனா, இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா
நாட்டில் கொரோனா வைரஸ் கேஸ்கள் முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்வு வாழ்க்கை மெல்ல திரும்பி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூரில் உள்ள கோழிப் பண்ணையில் சுமார் 100 பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த கோழிகள்
இதையடுத்து அதன் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தானே மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் பவுசாஹேப் டாங்டே கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷஹாபூர் தாலுகாவில் உள்ள வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் அடுத்தடுத்து சுமார் 100 பறவைகள் உயிரிழந்தன. அந்த பறவைகளின் மாதிரிகள் புனேவில் அமைந்துள்ள ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பறவை காய்ச்சல்
அதில் அத்தனை பறவைகளும் H5N1 பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பண்ணையைச் சுற்றி ஒரு கிமீ தூரத்திற்கு அமைந்துள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் 25,000 பறவைகள் அழிக்கப்படும் என்றும் இதற்கான பணிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என்றும் டாக்டர் பவுசாஹேப் டாங்டே தெரிவித்தார்.

நடவடிக்கை
மேலும் மற்ற பறவைகளுக்குத் தொற்று பரவுவதைத் தடுக்க மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பே இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் சூழலில், மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
