சிவசேனாவுடன் பஞ்சாயத்து நீடிக்கும் நிலையில் முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவுடன் மோதல் நீடிக்கும் நிலையில் அம்மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 146 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. அதனால் பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளிடையேயான மோதல் உச்சகட்டமாக வெடித்திருக்கிறது. முதல்வர் பதவி அல்லது முக்கிய அமைச்சர்கள் பதவி, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என பல நிபந்தனைகளை முன்வைத்து சிவசேனா அடம்பிடிக்கிறது.
அதேநேரத்தில் பாஜகவோ, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. அத்துடன் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுதான் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனால் ஆட்சி அமைப்பதாக தொடர்பாக இருகட்சித் தலைவர்களின் இன்றைய சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சிவசேனா எப்படியும் சமாதானமாகி இறங்கி வரும் என கருதுகிறது பாஜக. அதனால் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்பார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications