மகாராஷ்டிராவில் அனல் பறக்கும் அரசியல்.. ஆளுநருக்கு கொரோனா- மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, கொரோனா தொற்று பாதிப்பால் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கி உள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சியின் 32 எம்.எல்.ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத் ரிசார்ட்டில் தங்கி இருந்தார். பின்னர் அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு எம்.எல்.ஏக்களுடன் சென்று தங்கி உள்ளார் ஏக்நாத் ஷிண்டே.

இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயம் உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கவும் எம்.எல்.ஏ.க்கள் தப்பாமல் இருக்கவும் அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது; நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது; ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்கிற வியூகங்களுடன் பாஜகவும் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இன்று கொரோனா தொற்று பாதிப்பால் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு தொடக்கம் முதல் எப்போதும் முக கவசம் அணிந்தே பொது நிகழ்ச்சிகளில் கோஷ்யாரி பங்கேற்பார். கோஷ்யாரிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications