இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு சிறை.. செக் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
மும்பை: பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ராம் கோபால் வர்மா இது தொடர்பாக முக்கிய விளக்கத்தையும் அளித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தென்னிந்திய மொழிகளில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் ராம் கோபால் வர்மா. 1990களில் தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.

ராம் கோபால் வர்மா:
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா படத்திலும் எழுத்தாளராக பணிபுரிந்தவர் ராம் கோபால் வர்மா. அதன் இந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களைத் தயாரித்தும் இயக்கியும் வந்தார்.
சிறைத் தண்டனை
இதற்கிடையே செக் பவுன்ஸ் வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை உள்ளூர் நீதிமன்றம் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதற்காக இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராம் கோபால் வர்மாவுக்கு எதிரான செக் பவுன்ஸ் வழக்கு நடந்து வந்த நிலையில், அதில் தான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிடிவாரண்ட்:
மேலும், புகார்தாரருக்கு நிவாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரூ. 3.72 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஒருவேளை இழப்பீடு தொகையைச் செலுத்தவில்லை என்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பதையும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அப்போது ராம் கோபால் வர்மா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் நீதிமன்றம் பிறப்பித்தது.
தென்னிந்தியப் பட உலகில் முக்கிய சினிமா இயக்குநர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் தன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்று விளக்கமளித்துள்ள ராம் கோபால் வர்மா, தன்னிடம் வேலை செய்த ஊழியர் ஒருவரின் தவறு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராம் கோபால் வர்மா விளக்கம்:
இது தொடர்பாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "அந்தேரி நீதிமன்ற உத்தரவு தொடர்பாக நான் விளக்கமளிக்க விரும்புகிறேன். இது எனது முன்னாள் ஊழியர் தொடர்பான 7 ஆண்டு பழமையான ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் தொடர்பான வழக்கு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது வழக்கறிஞர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார்கள். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் மேற்கொண்டு எதுவும் கூற முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி:
ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நிதி சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அவர் தனது வீட்டையும் கூட விற்க வேண்டி இருந்தது. இந்த வழக்கானது ராம் கோபால் வர்மாவின் நிறுவனத்திற்கு எதிராக மகேஷ்சந்திர மிஸ்ரா மூலம் ஸ்ரீ என்ற நிறுவனம் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு இது தொடர்பான புகார் முதலில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ராம் கோபால் வர்மா ஜாமீன் பெற்றார். அவர் இந்த வழக்கில் விசாரணை நடந்த போது கைது செய்யப்படாத நிலையில், இப்போது மூன்று மாதங்கள் அவர் சிறையில் இருந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications