சரத் பவார் vs அஜித் பவார்.. யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ்? இன்று விசாரிக்கும் தேர்தல் ஆணையம்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி இப்போது சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இரு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில், எது உண்மையான என்சிபி கட்சி என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று விசாரிக்கிறது.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்தாண்டில் ஆரம்பித்த யாருமே எதிர்பார்க்காத மாற்றங்கள் இப்போது வரை தொடர்ந்தே வருகிறது. அங்கே கடந்தாண்டு வரை உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்து வந்தது.

அப்போது தான் திடீரென கடந்தாண்டு ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் திரண்டனர். கூட்டணி அரசுக்கு எதிராகக் கலகம் செய்த அவர்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். அதைத் தொடர்ந்து ஷிண்டே முதல்வராகவும் பதவியேற்றார். இது அப்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இதற்கிடையே கடந்தாண்டு சிவசேனாவில் எப்படி நடந்ததோ.. அதே காட்சிகளே இந்தாண்டு என்சிபி கட்சியிலும் நடந்தது. சரத் பவாருக்கு எதிராக அணி திரண்ட அஜித் பவார் ஆதரவாளர்கள், கட்சியில் இருந்து பிரிந்தனர், இந்த அஜித் பவார் கோஷ்டி பாஜகவுடன் கை கோர்த்து. அதைத் தொடர்ந்து ஷிண்டே சிவசேனா- அஜித் பவாரின் என்சிபி- பாஜக கூட்டணி அரசு அங்கே அமைத்துள்ளது. அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தாங்கள் தான் ரியல் என்சிபி கட்சி என்றும் இரு தரப்பினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்திடமும் முறையீடு செய்தனர். இதற்கிடையே இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் விசாரிக்க உள்ளது.
இரு தரப்பும் தங்கள் வாதங்களை பிரமாண பத்திரமாக முன்வைக்க உள்ளனர். இருதரப்பிலும் இருந்தும் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க சரத் பவார், அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications