சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங்.. சிக்கிய பாலிவுட் நடிகை.. கைதாகிறாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
Recommended Video
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பில் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.
அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்த போது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் புகார்கள் மத்திய அமலாக்கத் துறைக்கு வந்தன.

அமலாக்கத் துறை
இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூர் பங்களாக்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ 82.5 லட்சம் ரொக்கம், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திகார் சிறை
இந்த நிலையில் திகார் சிறையில் இருந்தவாறே மருந்து நிறுவன உரிமையாளரின் மனைவியிடம் அவரது கணவருக்கு ஜாமீன் பெற்று தர ரூ 200 கோடியை மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

காதலி
மேலும் அவரது காதலியும் நடிகையுமான லீனா மரியாவிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது. மேலும் பணமோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

சுகேஷ் சந்திரசேகர்
அதில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும் அவருக்கு ரூ 10 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த ஹேண்ட் பேக்குகள், பெர்சியன் பூனை, கார் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் இருவருக்கும் இடையே உறவு இருப்பது தொடர்பாக அவர்களது அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

கைதாகிறாரா ஜாக்குலின்
இந்த நிலையில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சுகேஷ் தொழிலதிபரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாக்குலின் எந்த நேரத்திலும் கைதாவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications