டோல் கட்டணம் அதிகம்தான்.. கண்டுக்காத மக்கள்.. மும்பை "அடல் கடல் பாலத்தில்" கூட்டமோ கூட்டம்!
மும்பை: பிரதமர் மோடி திறந்து வைத்த மும்பை அடல் பாலத்தில் சுங்க கட்டணம் அதிகம் விதிக்கப்பட்டாலும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த பாலத்தில் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல விதிகளை மீறி வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கார்களை நிறுத்தி செல்பி எடுப்பது வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் கடல் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பாலம் ரூ. 17,840 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 21.8 கிலோ மீட்டர் ஆகும். கடந்த 7 ஆண்டுகளாக முழு வீச்சில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிந்ததையடுத்து கடந்த 12 ஆம் தேதி பிரதமர் மோடி அடல் சேது பாலத்தை திறந்து வைத்தார்.

இந்த பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் 2 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும், மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இது இணைக்கிறது. இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
கட்டணம் அதிகம்: ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமான வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் செல்ல வாகனங்களுக்கு கட்டணமும் அதிக அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதாவது, கார்கள் ஒருமுறை பயணிக்க ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். ரிட்டர்ன் பயணத்திற்கும் சேர்த்து என்றால் ரூ. 375 கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி பாஸ் என்றால் ரூ.625 செலுத்த வேண்டும். மாதாந்திர பாஸ் தேவைப்பட்டால் ரூ.12,500 கட்டணமாக வசூலிக்கப்படும். மினி பஸ்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ. 400, ரிட்டன் பயணத்திற்கு ரூ.600 கட்டணம் ஆகும்.
பயணிகள் ஆர்வம்: அதேபோல தினசரி பாஸ் என்றால் ரூ. 1,000, மாதாந்திர பாஸ் என்றால் ரூ. 20,000 கட்டணமாக செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.830 கட்டணமாக செலுத்த வேண்டும். மாதாந்திர பாஸ் என்றால் ரூ.41,500 கட்டணம் ஆகும். கனரக லாரிகள் 3 அச்சுக்கள் கொண்ட வாகனத்திற்கு ஒருமுறை பயணிக்க 905 -ம் 4-6 அச்சுக்கள் கொண்ட டிரக்குகள் என்றால் ரூ.1,300 செலுத்த வேண்டும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
கட்டணம் அதிகம் என்றாலும் இந்த பாலத்தில் பயணம் செய்ய அதிக பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். எப்போதும் பாலம் படு பிசியாக இருப்பதை காண முடிகிறது. தொடங்கி வைக்கப்பட்ட முதல் நாளில் 24,083 வாகனங்கள் பாலத்தை பயன்படுத்தின. 2-வது நாளில் இந்த எண்ணிக்கை அப்படியே இரு மடங்கு ஆனது. 55,367 வாகனங்கள் சென்றன.
விபத்து அபாயம்: அதி நவீன கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே வேளையில் விதிகளை மீறி வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கார்களை நிறுத்தி செல்பி எடுப்பது வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது, ரீல்ஸ் எடுப்பது என சாலை விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் நடந்து கொள்வது விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் விதமாக உள்ளது.
வழக்கு பதிவு செய்யப்படும்: இதனால், மும்பை போலீசார் தற்போது வாகன ஒட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடல் சேது பாலத்தில் சட்ட விரோதமாக நிறுத்தி புகைப்படங்களை எடுத்தால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். ஆட்டோ, பைக்குள் இந்த பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் ஆட்டோக்கள், டிராக்டர்கள், பைக்குகள் மற்றும் விலங்குகளால் இழுத்து செல்லப்படும் வண்டிகள் கூட இந்த பாலத்தில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications