பாஜக மாஜி செய்தி தொடர்பாளர் மும்பை ஹைகோர்ட் நீதிபதியாக்க பரிந்துரை.. கிளம்பிய எதிர்ப்பு -பின்னணி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆர்த்தி அருண் சதே என்பவரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆவார். இதனால் எதிர்க்கட்சிகள் அவரது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த ஆரத்தி அருண் சதே யார்? பின்னணி என்ன? பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உயர்நீதிமன்றம் உள்ளது. இந்த உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது.

இதற்காக பணிகளை கொலிஜியம் மேற்கொண்டது. நீதிபதிகளை தேர்வு செய்யும் பணியை முடித்த கொலிஜியம் கடந்த மாதம் 28 ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கியது.
அதில் இடம்பெற்றிருந்த பெயர்களில் ஒன்று ஆர்த்தி அருண் சதே. இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பாஜகவின் செய்தி தொடர்பாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சுமார் 11 மாதங்கள் வரை அவர் அந்த பொறுப்பில் இருந்தார். கடந்த ஆண்டு தான் அவர் பாஜகவில் இருந்து வெளியேறினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் வெளியேறிய நிலையில் இப்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொலிஜியம் சார்பில் 3 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் ஒரு பெயராக ஆர்த்தியின் பெயர் இருக்கிறது. இன்னும் மத்திய அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஆர்த்தியின் பெயர் பரிந்துரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் அவரது நியமனத்தை எதிர்த்து வருகின்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷ்ரினாட் கூறுகையில், ‛‛இது நீதித்துறைக்கு அச்சுறுத்தல். நீதித்துறையின் ஒருமைப்பாட்டுக்கு விழுந்த அடியாக இருக்கிறது'' என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ரோஹித் பவார், ‛‛இது ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்'' என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், ‛‛பாஜக கட்சி சார்ந்த நியமனங்கள் என்பது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டை எடுத்து கொண்டால் கட்சியில் செயல்பட்டவர் நீதிபதியாவது ஒன்றும் புதிது இல்லை. திமுக உள்பட பல கட்சிகளில் செயல்பட்டவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாறு உள்ளது. இதற்கு முன்பு பலமுறை இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக நீதிபதி கேஎஸ் ஹெக்டேவை சொல்லலாம். இவர் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். மைசூர் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அதன்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
அதேபோல் நீதிபதி விஆர் கிருஷ்ணா ஐயர் கேரளாவில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தார். சுயேச்சை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் வென்றார். அதன்பிறகு அவர் அமைச்சராக செயல்பட்டார். கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருந்தார்.
அதேபோல் 1962ம் ஆண்டில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் திமுகவில் செயல்பட்டவர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் அம்பை சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு அவர் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் அரசியலுக்கு குட்பை சொன்னார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கிறஞராக செயல்பட்டார். பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். பிறகு 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications