விந்தணு, கருமுட்டை, வாடகை தாய்.. மூன்று பேருக்கு சேர்த்து உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு
மும்பை: விந்தணு தானம் செய்யும் ஆணோ அல்லது கரு முட்டை தானம் செய்யும் பெண்ணோ குழந்தையின் மீது சட்ட ரீதியாக உரிமை கோர முடியாது என்றும், பயாலஜிக்கல் பெற்றோர் என்று கூற முடியாது என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 42 வயதான பெண் ஒருவர், ஐந்து வயதாகும் இரட்டை பெண் குழந்தைகளை பார்வையிட அனுமதிக்கக் கோரிய வழக்கில் இந்த தீர்ப்பு அளித்துள்ளது.
அக்காள் தங்கைக்கு (மீனா, ராதா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இடையிலான இந்த வழக்கு சற்று விசித்திரமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த மீனா கணவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.. இதையடுத்து மீனாவை பரிசோதித்த போது குழந்தை பெற்றுகொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் மீனாவின் தங்கை ராதா, தனது அக்காளுக்கு கருமுட்டை தானம் செய்தார். அந்த கருமுட்டை மற்றும் மீனாவின் கணவரின் விந்தனு ஆகியவை வாடகை தாய்க்கு செலுத்தப்பட்டது. வாடகை தாய் மூலம் அந்த குழந்தை இல்லாத மீனா இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயாக மாறினார். இந்நிலையில் மீனா இரட்டை பெண் குழந்தைகள், தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் விபத்து ஒன்று இவர்கள் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தி உள்ளது.
அக்காவுக்கு குழந்தை வேண்டும் என்று கருமுட்டை தானம் செய்த தங்கை ராதா கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் ராதாவின் கணவர் மற்றும் குழந்தைகள் இறந்து போனார்கள். ராதா மட்டுமே உயிர் பிழைத்தார். குழந்தைகள் மற்றும் கணவரை பறிகொடுத்த ராதாவிற்கு அக்காவின் இரட்டை பெண் குழந்தைகள் மீது கொள்ளை பிரியம் ஏற்பட்டது. தான் கருமுட்டை தானம் செய்து பிறந்த குழந்தைகள் என்பதால் அவற்றின் மீது அளவற்ற பாசம் காட்ட தொடங்கி உள்ளார். இதனிடைய ஆகஸ்ட் 2019 முதல் மார்ச் 2021 வரை மீனாவின் வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருந்த நிலையில், ராதாவின் வருகையால் சிக்கலாக மாறியது.
2021ம் ஆண்டு மார்ச் மாதம் மீனாவிடன் அவரது கணவர் கடுமையாக சண்டை போட்டுள்ளார். அதன்பின்னர் மனைவியான மீனாவை அப்படியே தவிக்க விட்டுவிட்டு, அவருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் குழந்தைகளுடன் வேறொரு குடியிருப்பில் அவரது கணவர் குடியேறினார்.
கொஞ்ச நாளில் மீனாவின் தங்கையான ராதாவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். சாலை விபத்திற்குப் பிறகு மனச்சோர்வடைந்த ராதா, கருமுட்டை தானத்தால் பிறந்த இரட்டைக் குழந்தைகளை தன் குழந்தைகள் என்று உரிமைகோரியதுடன், அதை வளர்க்க விரும்பினார். அதற்காகவே அக்காளின் கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, தனது தங்கை ராதா மற்றும் தனத கணவரின் செயலால் அதிர்ச்சி அடைந்தார். தனது விந்தணு மற்றும் ராதாவின் கரு முட்டையில் பிறந்த குழந்தை என்பதால் இந்த குழந்தைக்கு தாங்கள் தான் அம்மா அப்பா என்று கூறியதுடன், மீனாவை குழந்தையை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.. இதனால் தனது வாழ்க்கையே இப்படி ஆகிவிட்டதே எனறு அதிர்ச்சி அடைந்த மீனா தனது குழந்தையை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மும்பையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் மீனாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மீனா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கருமுட்டை தானம் செய்த தனது தங்கையும், அவரது கணவரும் ஒன்றாக வசித்த வருவதாகவும், தனது இரட்டை பெண் குழந்தைகளை பார்க்கக்கூட விடவில்லை என்று கூறினார்.
இந்த வழக்கில் பதில் அளித்த மீனாவின் கணவர் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியின் தங்கையான ராதா கருமுட்டை தானம் செய்துள்ளவர் என்பதால், இரட்டைக் குழந்தைகளின் உயிரியல் பெற்றோர் என்று அழைக்கப்படுவதற்கு அவருக்கு முறையான உரிமை இருக்கிறது. எனவே குழந்தைகள் மீது என் மனைவிக்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மிலிந்த் ஜாதவ் இன்று தீர்ப்பபளித்தார், இதன்படி, மீனாவின் கணவரின் வாதத்தை ஏற்க மறுத்தார். அத்துடன் மீனாவின் தங்கை ராதா கருமுட்டை தானம் செய்தவர் என்றாலும், உயிரியல் பெற்றோர் என்று உரிமை கோருவதற்கு அவருக்கு முறையான உரிமை இல்லை.. மேலும் மீனாவின் தங்கையின் பங்கு என்பது கரு முட்டை தானம் செய்துள்ளார். அந்த வகையில் பார்த்தால், அவர் ஒரு தன்னார்வ நன்கொடையாளர், அதிகபட்சம், அவர் ஒரு மரபணு ரீதியாக தாயாக தகுதி பெறலாம், அதற்கு மேல் எதுவும் இல்லை.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவர், 2018 ஆம் ஆண்டு வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம் 2021 நடைமுறைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். எனவே பிரிந்த தம்பதியினரிடையே வாடகைத் தாய் ஒப்பந்தம் நடந்ததால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழங்கிய வழிகாட்டுதல்கள் விதியின்படி, விந்தனு தானம் அல்லது கருமுட்டை தானம் செய்த நன்கொடையாளர் மற்றும் வாடகைத் தாய் ஆகியோர் பெற்றோருக்கான அனைத்து உரிமைகளையும் கைவிட வேண்டும்.எனவே இந்த வழக்கில் இரட்டை பெண் குழந்தைகள் மனுதாக்கல் செய்த மீனா மற்றும் அவரது கணவரின் மகள்களாக இருப்பார்கள் .
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல் படி, விந்தனு தானம் அல்லது கருமுட்டை தானம் செய்த நன்கொடையாளர் மற்றும் வாடகைத் தாய் ஆகியோருக்கு எந்த உரிமையும் இல்லை.. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, மனுதாரரின் தங்கையான ராதாவுக்கு எந்த உரிமையும் இல்லை , இரட்டை மகள்களின் தாயார் என்று அவர் உரிமை கோர முடியாது" இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார். அதேநேரம் ஒவ்வொரு வார இறுதியிலும் குழந்தைகளை மூன்று மணி நேரம் பார்க்க மீனாவை அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications