தி ரியல் Goat ஸ்டோரி இதுதான்.. ‛ராம்’ எனும் இனிஷியலால் கறிக்கடைக்காரருக்கு வந்த பிரச்சனையை பாருங்க
மும்பை: நடிகர் விஜய் நடித்த ‛தி கோட்’ திரைப்படம் திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கும் சூழலில் தான் புதிய Goat கதை வெளியாகி உள்ளது. அதாவது ஆட்டின் உடலில் ‛RAM’ என எழுதப்பட்டு இருந்த 3 எழுத்துகளால் மும்பையை சேர்ந்த கறிக்கடைக்காரர் பிரச்சனையில் சிக்கியதும், இந்த பிரச்சனையில் இருந்து 2 மாத சட்ட போராட்டத்துக்கு பிறகு அவர் மீண்டு வந்துள்ளது பற்றிய விபரம் வருமாறு:
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் முகமது ஷபி என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி அவரது இறைச்சி கடைக்கு வெளிப்புறத்தில் உள்ள மின்கம்பத்தில் ஆடு ஒன்று கட்டி போடப்பட்டு இருந்தது.

அந்த ஆட்டின் மீது மஞ்சன் நிறத்தில் RAM என்று ஆங்கிலத்தில் ‛ராம்’ என எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு சென்றது. உடனடியாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர் சிபிடி பீலாபர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
‛‛இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் இறைச்சிக்கடையில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆட்டின் மீது ராம் என்று எழுதப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டது. இது மதம் சார்ந்த பிரச்சனையாக மாறிவிடக்கூடாது என்பதால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி போலீசார் சட்டப்பிரிவு 295 ஏ ((மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே புண்படுத்தும் செயல்), சட்டப்பிரிவு 34 (பொது நோக்கம்) மற்றும் விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கறிக்கடைக்காரர் முகமது ஷபி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதோடு கறிக்கடைக்கு சீல் வைத்தனர். அங்கு இருந்த 22 ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு என்பது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது முகமது ஷபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பைஜான் குரேஷி தனது தரப்பு வாதத்தை பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‛‛நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை நாங்கள் தாக்கல் செய்தோர்.
அதில் ஆட்டை வாங்கிய ரியாஸ் அகமது மிதானி (Riyaz Ahmed Mithani) என்பவர் தனது பெயரின் ஆங்கில எழுத்தை சேர்த்து RAM (Riyaz -ல் இருந்து R, Ahmed -ல் இருந்து A, Mithani-ல் இருந்து M) என எழுதி வைத்தார். பக்ரீத் வேளையில் அதிகமானவர்கள் ஆடுகள் வாங்குவார்கள். அந்த சமயத்தில் ஆடுகள் மாறிவிடக்கூடாது என்பதற்காக இப்படியான அடையாளங்களை இடம்பெற வைப்பது வழக்கம் தான்’’ என்ற வாதம் வைக்கப்பட்டது.
இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதுமட்டுமின்றி முகமது ஷபியின் கறிக்கடைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவு என்பது ஆகஸ்ட் 23ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட 22 ஆடுகளை முகமது ஷபியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் கடந்த ஜுன் மாதம் 27 ம் தேதியே ஒப்படைத்தது. இந்நிலையில் தான் 2 மாத சட்ட போராட்டத்துக்கு பிறகு முகமது ஷபிக்கு ஆடு மற்றும் கறிக்கடை வந்து சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications