செம ஸ்பீடு.. கஞ்சா போதை வேற.. அப்படியா பண்ணுவாங்க.. கார் டாப்பில் போலீஸ்காரர்.. பதைபதைக்கும் வீடியோ
மும்பை: கஞ்சா போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்ததோடு தடுத்து நிறுத்த முயன்ற போக்குவரத்து போலீஸ்காரரையும் கார் பேனட்டில் வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் 20 கிலோ மீட்டர் தூரம் சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள புளூ டைமண்ட் சந்திப்பில் சித்தேஷவர் மாலி (வயது 37) என்ற போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வெள்ளை நிற கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த போக்குவரத்து காவலர் சித்தேஷ்வர் மாலி அந்த காரை தடுத்த நிறுத்த முயன்றார்.

சாலைக்கே சென்று காரை ஓரம் கட்டுமாறு காரை ஓட்டி வந்தவரை பார்த்து சைகை செய்தார். ஆனால், கொஞ்சம் கூட வேகத்தை குறைக்காமல் அந்த கார் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. காவலர் சித்தேஷ்வர் மாலி மீது மோதுவது போல கார் வந்தது. இதனால் பதறிப்போன அந்த காவலர் சாதுர்யமாக கார் பேனட்டில் ஜம்ப் செய்து தொங்கிக் கொண்டார்.
அப்போதும் காரை நிறுத்தாமல் அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் இல்லை.. சுமார் 20 கி.மீட்டர் தூரத்திற்கு இப்படி போலீஸ்காரரை இழுத்து சென்ற படியே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றார் அந்த இளைஞர். எந்த ஒரு சிக்னல்களிலும் கார் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சினிமா காட்சிகளை போல நடைபெற்ற இந்த விபரீத நிகழ்வை பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாரை கார் பேனட்டில் வைத்து இளைஞர் ஒருவர் இழுத்துசெல்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசரும் வயர்லெஸ் மூலமாக கார் சென்ற சாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சாலையின் குறுக்கே கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்து போலீசார் காத்திருந்தனர்.

இதனால், போவதற்கு வழியில்லாமல் அந்த காரை கவன் பாதா பகுதியில் நிறுத்தினர். உடனடியாக பேனட்டில் தொங்கிய காவலர் மீட்கப்பட்டார். காரை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக ஓட்டி வந்த அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசராணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை முயற்சி மற்றும் போதையில் கார் ஓட்டி வந்தது என இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர். பிசியான நவி மும்பை சாலையில் சினிமா காட்சிகளை போல நடைபெற்ற இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications