"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வினோதமான பிஸ்னஸ் மாடலை ஆரம்பித்துள்ளார். அவரிடம் பேசி புலம்ப தனி கட்டணம்.. கண்ணீர்விட்டுப் புலம்ப தனி கட்டணம் என பிஸ்னஸை ஆரம்பித்துள்ளார். இவரிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொல்லிப் புலம்பவே பலரும் வருகிறார்களாம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் சூழலில் நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பொதுவாக வெளிநாடுகளில், அதிலும் குறிப்பாக ஜப்பான் போன்ற மக்கள் தொகை குறைவாகவும் பேசக் கூட ஆள் இல்லாத நாடுகளில் ஒரு பிஸ்னஸ் மாடல் இருக்கிறது. அங்கு நீங்கள் உங்கள் பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட்டை வாடகைக்கு எடுக்கலாம். அல்லது பேசி புலம்ப, உங்களுடன் நேரம் செலவழிக்க ஆட்களை வாடகைக்கு எடுக்கலாம்.

வினோத பிஸ்னஸ்
இதெல்லாம் ஒரு தொழிலா.. இதற்கு எல்லாம் எப்படி ஆட்கள் வருவார்கள் என்ற கேள்வி நிச்சயம் நம்மில் பலருக்கும் எழுந்து இருக்கும். இதற்கிடையே இந்தியாவிலும் ஒருவர் இதேபோன்ற பிஸ்னஸை ஆரம்பித்துள்ளார். உங்கள் பிரச்சினைகளை நீங்கள் இவரிடம் கொட்டி தீர்க்கலாம்.. பக்கத்தில் உட்கார்ந்து அழுகலாம்.. ஒவ்வொன்றுக்கும் இவர் தனித்தனியாகக் கட்டணத்தை வசூலிக்கிறார்.
மும்பையில் தான் அவர் இந்த பிஸ்னஸை ஆரம்பித்துள்ளார். அங்குள்ள பீச்சில் உட்கார்ந்து, இந்த வினோத சேவையை அவர் ஒரு தொழிலாகவே தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரது பிஸ்னஸ் ஐடியாவும் ட்விட்டரில் டிரெண்டாகி பெரிய விவாதமாக மாறியுள்ளது.
கட்டண விவரம்
அந்த வீடியோவில், அந்த மனிதர் மணலில் கலர்ஃபுல் பலகையுடன் அமர்ந்திருந்தார். அதில், சிறு பிரச்சனைகளுக்கு ₹250, பெரிய கவலைகளுக்கு ₹500, மற்றும் வெறுமனே உடன் அமர்ந்து அழுவதற்கு ₹1,000 என அவரது சர்வீஸ் மற்றும் கட்டண விவரங்களைத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். வீடியோ எடுக்க வந்த நபர் அவரிடம் இது குறித்துக் கேட்டார். உண்மையாகவே இது தான் உங்கள் வேலையா எனக் கேட்க.. அவரும் புன்னகையுடன் ஆம் எனத் தலையசைத்தார்.
மக்கள் பலர் தன்னிடம் வருவதாகவும், பிரச்சனைகளைப் புலம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு, ஆலோசனைகள் வழங்கி, அவர்கள் மனநிம்மதியுடன் திரும்ப உதவுவதாகவும் விளக்கினார். இதை வெறுமன ஒரு தொழிலாக மட்டும் தான் செய்யவில்லை என்றும், இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1,000 ரூபாய் கட்டணம்
வீடியோ எடுத்த அந்த நபர், "நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள் ஓகே.. மக்கள் வருவார்களா" எனக் கேட்கிறார். அதற்கு அவர், "ஆம். நிறையப் பேர் வருகிறார்கள். சிறு பிரச்சனைகளுக்கு 250 ரூபாய். பெரிய கவலைகளுக்கு 500 ரூபாய்.. சேர்ந்து அழுவதற்கு 1,000 ரூபாய். மக்களின் பிரச்சனைகளைக் கேட்க நான் இங்குள்ளேன்" எனப் பதிலளித்துள்ளார். பலகையில் அவரை எப்படி காண்டெக்ட் செய்வது என்ற விவரங்களும் இடம்பெற்றிருந்தன.
Man charges people to listen to problems. Ye hum free mein karte hai 😂 pic.twitter.com/X0plpZSWFG
— प्रेsident (@Desi_urbann) March 20, 2026
நெட்டிசன்கள்
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியான உடனேயே இணையத்தில் டிரெண்டானது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். நெட்டிசன் ஒருவர், "இந்த மனிதர் கடற்கரையில் மிகப் பெரிய பிஸ்னஸ் மாடலை கண்டுபிடித்து ஆரம்பித்து இருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "எந்தப் பட்டமோ, அதிகக் கட்டணமோ இல்லாமல்.. மனநல மருத்துவர் செய்யும் வேலையைச் செய்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். மனநல ஆலோசகர்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளிலேயே இருப்பார்கள்.. ஆனால் கடற்கரை போன்ற சூழல் பலர் மனம் திறந்து பேச உதவும் என்றும் சுட்டிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications