அனுராதா பட்வால்தான் என் அம்மா.. ஷாக் தந்த கேரளப் பெண்.. ரூ. 50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
மும்பை: பிரபல பாடகி அனுராதா பட்வால்தான் எனது நிஜமான அம்மா என்று கூறி கோர்ட் படியேறியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த 45 வயதுப் பெண். இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க மறுத்துள்ள அனுராதா பட்வால், இது முட்டாள்தனமானது. இதற்கெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.
கஜல் பாடல்களில் பிரபலமானவர் அனுராதா பட்வால். அதேபோல இந்தியில் பக்திப் பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். ஏராளமான இந்தித் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். பிரபலமான பாடகியான அவருக்கு இப்போது புது சிக்கல் வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் 45 வயதான மோடக்ஸ் கர்மலா கேரள குடும்ப நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் பாடகி அனுராதா தனக்கு ரூ. 50 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். அனுராதா பட்வால்தான் தனது நிஜமான தாயார் என்றும் அவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதில் சொல்ல மாட்டேன்
இதுகுறித்து அனுராதா பட்வாலிடம் செய்தியாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை. முட்டாள்தனமான வாதங்களுக்கு விளக்கம் தர விரும்பவில்லை. உங்களது அக்கறைக்கு நன்றி என்று மட்டும் கூறி நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து அனுராதா பட்வாலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அனுராதா பட்வாலின் மகள் கவிதா. அவர் 1974ம் ஆண்டு பிறந்தார். எனவே கர்மலாவின் கூற்று தவறானது, பொய்யானது. இந்த கர்மலா, அனுராதா பட்வாலின் தந்தையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் இப்போது உயிருடனேயே இல்லை. இறந்து விட்டார்.

வழக்கு விசாரணை
உண்மையிலேயே கர்மலா அனுராதாவின் மகளாக இருந்தால், அனுராதாவுக்கு அவர்தான் பணம் கொடுக்க வேண்டுமே தவிர, அனுராதாவிடம் அவர் பணம் கேட்கக் கூடாது என்றார். இதற்கிடையே, கர்மலா தாக்கல் செய்த மனுவை கேரள குடும்ப நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஜனவரி 27ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் அனுராதா பட்வாலுக்கு அது உத்தரவிட்டுள்ளது.

மோடக்ஸ் கர்மலா
கர்மலாவின் இந்த வழக்கால் மும்பை திரையுலகிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்மலா கூறுகையில், சில மாதங்களுக்கு முன்புதான் எனது உண்மையான தாயார் யார் என்பது தெரிய வந்தது. எனது தந்தை பெயர் பொன்னச்சன். அவர்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மரணத் தருவாயில், உனது உண்மையான தாயார் ஆக்னஸ் (பொன்னச்சனின் மனைவி) இல்லை. அனுராதா பாட்வால்தான் உண்மையான தாயார். இது ஆக்னஸுக்குக் கூட தெரியாது என்று கூறினார்.

தந்தை சொன்ன தகவல்
இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து எனது தந்தையிடம் மேலும் கேட்டபோது அவர் பல தகவல்களைக் கூறினார். அப்போது எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். மகாராஷ்டிராவில் இருந்தபோதுதான் அனுராதா பட்வாலுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது என்னால் தனது தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என அனுராதா பட்வால் கருதியதால் எனது பெற்றோரிடம் தத்து கொடுத்து விட்டார். பிறகு எனது தந்தை கேரளாவுக்கு விட்டார். அப்போது எனக்கு 4 வயது இருக்கும்.

ஒரிஜினல் மகள்
இந்த நிலையில்தான் தனது மகள்களில் ஒருவர் இறந்து போய் விட்டதாக அனுராதா பட்வால் ஒரு பதிவில் கூறியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து எனது நிஜமான தாயான அனுராதா பட்வாலை சந்திக்க முயன்றேன். ஆனால் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. போன் செய்தேன். ஆனால் அவர் எனது எண்ணை பிளாக் செய்தார். இதனால்தான் கோர்ட்டை நாட முடிவு செய்தேன் என்றார் கர்மலா.
தேசிய விருது, பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ள அனுராதா பட்வாலுக்கு வந்துள்ள இந்த மகள் சிக்கல் பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications