ஏதோ நடந்திருக்கு.. ரிசல்ட்டில் மிகப்பெரிய சதி.. சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி பரபர!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி, 230க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், இந்த தேர்தல் முடிவில் ஏதோ பெரிய சதி நடந்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷின்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாயுதி கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. மற்றொருபுறம் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் களமிறங்கின.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மகாயுதி கூட்டணி வெற்றியை நோக்கிச் சென்றுள்ளது. பாஜக தற்போது 133 தொகுதிகளில் வெற்று பெற்றுள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய கட்சி அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள இருக்கிறது பாஜக. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மை எண்ணிக்கையை மஹாயுதி கூட்டணி தாண்டியதால், அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சி, 41 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வென்றுள்ளன.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி சஞ்சய் ராவத், இந்த தேர்தல் முடிவு அதானி உதவியால் வந்தது என்றும் சதி நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் சில குளறுபடிகளைச் செய்துவிட்டார்கள். எங்களிடமிருந்து சில இடங்களை திருடி விட்டார்கள். இது நிச்சயம் மக்களின் முடிவாக இருக்க முடியாது. இந்த தேர்தல் முடிவு அதானி உதவியால் வந்தது. நிச்சயமாக சதி நடந்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவை பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் அதானி இணைந்து தயாரித்துள்ளனர்.
களத்தில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. அரசின் மீது அப்பட்டமான கோபம் இருந்தது. இதில் ஒரு பெரிய சதி இருப்பதாக நினைக்கிறேன். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எப்படி வெற்றி பெற முடியும்? மகாராஷ்டிராவை தனது துரோகத்தால் கோபப்படுத்திய அஜித் பவார் எப்படி வெற்றி பெறுவார்? தேர்தல் முடிவுகளில் ஏதோ நடந்துவிட்டது. தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
இந்த ரிசல்ட்டை மகாராஷ்டிரா மாநில பொதுமக்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் நிறுவப்பட்டன. ஷிண்டேவுக்கு 60 இடங்கள் கிடைப்பதும் அஜித் பவாருக்கு 40 இடங்கள் கிடைப்பதும் பாஜகவுக்கு 125 இடங்கள் கிடைப்பதும் சாத்தியமா? மகாராஷ்டிரா மக்கள் நிச்சயமாக இப்படி நேர்மையற்றவர்கள் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications