மகாராஷ்டிரா தேர்தல்: காங்கிரஸுக்கு ஷாக்..அஜித்பவார் என்சிபிக்கு தப்பி ஓட தயாராகும் 3 எம்.எல்.ஏக்கள்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு (என்சிபி NCP) தாவ உள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சுலபா கோட்கேவும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸுக்கு தப்பி ஓட இருக்கிறாராம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை பதவிக் காலம் நவம்பர் 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன; எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டு கூட்டணிகளுமே முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்து தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிரா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்திருந்தது. குறிப்பாக ஹரியானாவில் உட்கட்சி மோதலால் காங்கிரஸ் மரண அடி வாங்கியது. இதனால் முன்கூட்டியே மகாராஷ்டிராவில் உட்கட்சி மோதல் விவகாரங்களுக்கு முடிவு கட்டுவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. இதன் முதல் கட்டமாக, முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்து எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் தன்னிச்சையாக பேட்டி தரக் கூடாது என அதிரடியான உத்தரவை டெல்லி மேலிடம் பிறப்பித்தது. மேலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுடன் நெருக்கமாக இருந்த சுலபா கோட்கே எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு டிஸ்மிஸ் செய்தது காங்கிரஸ்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட சுலபா கோட்கே, ஹிராமன் கோஸ்கர், சீசன் சித்திக் ஆகிய 3 பேரும் எந்த நேரத்திலும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவக் கூடும் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 எம்.எல்.ஏக்களும் மகாராஷ்டிரா மேல்சபை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications