மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக, காங்கிரஸ். என்சிபி, சிவசேனா அத்தனைக்கும் வாழ்வா சாவா போராட்டம் ஏன்?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 2-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களைத் தொடர்ந்து நடைபெறும் மகாராஷ்டிரா தேர்தல் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அப்பால் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியான மகாயுதி கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கட்சிகளுக்கும் இந்த சட்டசபை தேர்தல் மிகப் பெரும் சவாலாக, வாழ்வா சாவா போராட்டமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்துத்துவா சித்தாந்தம் வேர்பிடித்து நிற்கக் கூடிய முதன்மை மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. பாஜக தொடங்கப்பட்ட 1980-ல் மகாராஷ்டிரா தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட போதே 14 இடங்களைக் கைப்பற்றியது.

இதன் பின்னர் 1985-ல் 16, 1990-ல் 42, 1995-ல் 63, 1999-ல் 56, 2004-ல் 54 என கணிசமான இடங்களைப் பெற்று வந்தது பாஜக. 2009-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மற்றொரு இந்துத்துவா கட்சியான சிவசேனாவுடன் கை கோர்த்து களம் கண்டது பாஜக. 2009 தேர்தலில் சிவசேனா 160, பாஜக 119 இடங்களில் போட்டியிட்டன. அத்தேர்தலில் பாஜக 46, சிவசேனா 45 இடங்களில் வென்றன.
2014-ம் ஆண்டு மகாராஷ்டிரா தேர்தல் களம் மிக முக்கியமானதாக மாறியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வசமிருந்த மகாராஷ்டிரா ஆட்சியை பாஜக முதன் முதலாக கைப்பற்றியது. 2014 தேர்தலில் பாஜக 122 இடங்களில் வென்று அதிரடி காட்டியது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள் என்பதால் சிவசேனா ஆதரவுடன் கூட்டணி அரசு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி அமைத்து களம் கண்டது. 164 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும் 126 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பாஜகவும் சிவசேனாவும் இணைந்து எளிதாக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை இருந்த போது முதல்வர் பதவி விவகாரத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
இத்தனை ஆண்டுகாலம் எதிரிகளாக இருந்த 44 இடங்களில் வென்ற காங்கிரஸ், 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்த சிவசேனா ஆட்சியை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வரானார். ஆனால் பாஜக விட்டுவிடவில்லையே.. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவையே இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றிவிட்டது. இதேபோல சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்து அஜித்பவார் தலைமையிலான அணியை உருவாக்கி ஆட்சியில் இணைத்துக் கொண்டது பாஜக.
தற்போதைய நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் கட்சிகளின் பலம்:
பாஜக 102
அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் 40
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 38
பகுஜன் விகாஸ் அகாடி 2
இதர கட்சிகள் 20
எதிர்க்கட்சிகள்
காங்கிரஸ் 37
உத்தவ் தாக்கரே சிவசேனா 16
சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 12
சமாஜ்வாதி 2
சிபிஐ எம் 1
ஓவைசி கட்சி 2
உழவர் உழைப்பாளர் 1
காலி இடங்கள் 15
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு இருந்த தேர்தல் களம் வேறு. அப்போது தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை ஒருங்கிணைந்து இருந்தன. தற்போது இந்த இரு பெரும் கட்சிகளும் இரண்டாக பிளவுபட்டு நிற்கின்றன. பாஜகவும் உடைக்கப்பட்ட சிவசேனா பிரிவு, தேசியவாத காங்கிரஸ் பிரிவை நம்பி களம் காண்கிறது. ஆகையால்தான் இந்த தேர்தல் மகாராஷ்டிராவின் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் வாழ்வா? சாவா போராட்டமாக இருக்கிறது என்கின்றனர்.
பாஜகவைப் பொறுத்தவரையில் இதுவரை தனித்தே 100 இடங்களுக்கும் மேல் வென்றிருக்கிறது. ஆனால் தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எனும் இரு பெரும் கட்சிகளை உடைத்து அவற்றை கூட்டணிக் கட்சிகளாக ஏற்றுக் கொண்டு தேர்தல் களத்துக்கு வருகிறது. இந்த இரு பிரிவுகளுக்கும் உண்மையில் மக்கள் ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என்பது எதுவும் தெரியாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டு இந்த கட்சிகளை சுமந்து கொண்டு களத்தில் நிற்கிறது பாஜக.
அதேபோல லோக்சபா தேர்தலில் பாஜகவை மிரட்டிவிட்டது காங்கிரஸ். ஆனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் கோட்டைவிட்டது காங்கிரஸ். இதனால் மகாராஷ்டிரா தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது அந்த கட்சி. அதுவும் உடைக்கப்பட்ட உத்த்அவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை விட அதிகமான இடங்களைப் பெற வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
அதேபோல தாங்களே உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என்பதை ஏக்நாத் ஷிண்டே- உத்தவ் தாக்கரே; சரத்பவார்- அஜித்பவார் நிரூபிக்க போராட வேண்டியது உள்ளது. அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் நெருப்பாற்றுக்கு நடுவே அக்னி சட்டியை சுமந்து செல்வதைப் போலத்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications