மகாராஷ்டிரா பத்லாப்பூர் பாலியல் கொடுமை- போராட்டத்துக்கு பின் நடவடிக்கை? போலீசாருக்கு கோர்ட் கண்டனம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பத்லாப்பூரில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பொதுமக்களின் போராட்டத்துக்குப் பின்னரே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டது ஏன்? என மும்பை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. பத்லாப்பூர் பள்ளி பிஞ்சு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பொதுமக்கள் கடுமையாக போராட்டம் நடத்தி, 10 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பின்னரே போலீசார் நடவடிக்கை எடுத்ததை மும்பை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
மும்பையை அடுத்த பத்லாப்பூரில் ஆதர்ஷ் வித்யா மந்திர் என்ற பள்ளியில் பிஞ்சு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அந்த பள்ளி ஊழியர்கள், பிஞ்சு குழந்தைகளை கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அம்பலமானது.

இதனால் கொந்தளித்த பொதுமக்கள் நேற்று முன் தினம் ஒன்று திரண்டு அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். பத்லாப்பூர் ரயில் நிலையத்தையும் கைப்பற்றி சுமார் 10 மணிநேரம் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. போலீசார் மீது சரமாரி கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான போலீசார் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து நேற்று 2-வது நாளாக பத்லாப்பூரில் இணையசேவைகள் முடக்கப்பட்டு பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பத்லாப்பூர் சம்பவத்துக்கு நீதி கோரி நாளை எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா பந்த்- முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் அகாடி இந்த மகாராஷ்டிரா பந்த்- முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பத்லாப்பூர் பாலியல் தொல்லை சம்பவத்தை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்த பின்னரே போலீசார் நடவடிக்கை எடுத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications