"பற்றி எரிந்த பேருந்து.. கடைசி நொடி வரை பிரியாத குடும்பம்.." அரவணைத்தபடியே உயிரிழந்த சோகம்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 25 பேர் தீயில் எரிந்து கொடூரமாக உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிர் போகும் நொடி வரை வரை ஒன்றாகவே இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புல்தானா என்ற இடத்திற்கு அருகே உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று முன்தினம் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புனேவுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்தில் சிக்கியது.

நள்ளிரவு 1:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அந்த தனியார் பேருந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. உடனடியாக அதில் தீ மளமளவென பரவியது. இதனால் வாகனம் அப்படியே நாசமானது.
மகாராஷ்டிரா விபத்து: பேருந்தில் 33 பேர் பயணித்த நிலையில், அவர்களில் சிலர் பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு வெளியே வந்துவிட்டனர். இருப்பினும், 33 பயணிகளில் 25 பேர் உடல் கருகிப் பலியாகினர். இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்த ஒரு குடும்பம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விபத்தில் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்த நிலையில், அவர்கள் உயிரிழக்கும் கடைசி நொடி வரை ஒன்றாகவே இருந்துள்ளனர். அவர்கள் உடல்கள் அரவணைத்தபடியே இருந்துள்ளது.
அம்பேகான் தாலுகாவின் நிர்குட்சார் கிராமத்தில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு பள்ளியின் ஆசிரியராக உள்ளவர் கைலாஷ் கங்கவானே (52). இவரது மனைவி காஞ்சன் கங்காவானே (41) மற்றும் மருத்துவ மாணவியான இவர்களது மகள் ருதுஜா கங்காவானே (21) என மூவரும் இந்த பேருந்தில் பயணித்துள்ளனர். இந்த தம்பதி தங்கள் மகன் ஆதித்யாவை நாக்பூரில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டு அப்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.
ஒன்றாகவே இருந்தனர்: இது குறித்து கைலாஷின் உறவினர் ரூபேஷ் கங்கவானே கூறுகையில், "அவர்கள் மூவரின் உடலும் இறுக்கமாக அரவணைத்த நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் உயிர் போகும் கடைசி நொடி வரை ஒன்றாகவே இருந்துள்ளனர். அவர்களின் மகனுக்கு நாக்பூரில் சட்டக் கல்லூரியில் சீட் கிடைத்தது. அவரை விட்டு விட்டுத் திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கூட கைலாஷ் உறவினருடன் பஸ் ஏறியவுடன் கூப்பிட்டுச் சொல்லியுள்ளார். சீக்கிரம் வந்துவிடுவோம் என்றே சொல்லியுள்ளார். இருப்பினும், இப்படி ஆகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
நல்ல மனிதர்: அது குறித்து அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில், "கைலாஷ் 20 ஆண்டுகளாக டீச்சராக பணிபுரிந்து வருகிறார். அவரது தம்பியும் ஒரு ஆசிரியர் தான். அவர் நல்ல மனிதர். நல்ல முறையிலேயே அனைவருடனும் பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல வந்திருந்தார். இதுவே அவர் எந்தளவுக்கு நல்லவர் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
அவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர். பொருளாதார ரீதியாக இந்த நிலைக்கு வர அவர் ரொம்பவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. இந்த நிலைக்கு வந்தவுடன் அவர் சுற்றி இருக்கும் அனைவருக்கும் உதவியே வந்தார். அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications