மாநில அரசு உளவு பார்ப்பதாக பரபர புகார்: கூட்டணி கட்சிகள் கோபம்- மகா. காங். தலைவர் அந்தர் பல்டி
மும்பை: தம்மை முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் அஜித் பவார் அலுவலகங்கள் உளவு பார்ப்பதாக புகார் தெரிவித்து மகாரஷ்டிரா கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தினார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல். ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் தாம் இப்படி பேசியதாக நானா படோல் திடீரென இப்போது பல்டி அடித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மூன்று துருவங்களாக இருந்த கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை நடத்துவதால் இடைவிடாத சலசலப்புகள் நீடிக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக இருந்த நானா படோல் திடீரென மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தடாலடியின் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மகா. கூட்டணி அரசு- ராகுல் அதிருப்தி
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்ததில் ராகுலுக்கு உடன்பாடு இல்லை என்கிற கருத்தும் உள்ளது. இதனால் நானா படோல் சுதந்திரமாக செயல்பட ராகுல் காந்தி அனுமதித்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு முறையும் சலசலப்புகளை நானா படோல் உருவாக்கி வருகிறார்.

தனித்து போட்டி-காங்.
அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என பேசிய பெரும் புகைச்சலை கூட்டணியில் உருவாக்கினார். இருந்த போதும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இதனை லாவகமாக எதிர்கொண்டனர்.

சிவசேனா- பாஜக
இன்னொரு பக்கம் சிவசேனா எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி சேருமோ என்கிற பரபரப்பும் மகாராஷ்டிரா அரசியலில் நீடிக்கிறது. இதற்கு ஏற்ப சிவசேனா, பாஜக தலைவர்கள் அடிக்கடி கருத்துகளை வெளியிட்டும் வருகின்றனர்.

உளவு பார்ப்பதாக புகார்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நானா படோல், தம்மை முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகமும், துணை முதல்வர் அஜித் பவார் அலுவலகமும் உளவு பார்க்கிறது. தமது தொலைபேசி உரையாடல்கள் உடனடியாக இருவரது அலுவலகத்துக்கும் சென்றுவிடுகிறது. புனே பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களை துணை முதல்வர் அஜித் பவார் புறக்கணிக்கிறார் என அதிரடியாக பேசினார்.

திடீர் பல்டி
இந்த பேச்சால் காங்கிரஸ் மூத்த தலைவர்களே அதிருப்தி அடைந்துள்ளனர். இது நானா படோலின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கி கொண்டனர். அதேபோல் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் கடும் அதிருப்தியை காட்டினர். இதனையடுத்து விளக்கம் அளித்திருக்கும் நானா படோல், தாம் பா.ஜ.க.வை குறிவைத்துதான் பேசினேன். மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசை இலக்கு வைத்து பேசவில்லை என்றார். அடங்காத சலசலப்பு அலைகள்!












Click it and Unblock the Notifications