பஞ்சாயத்து ஓவர் கிளம்புங்க.. அமைச்சரவை கூட்ட வெளிநடப்பு குறித்து துணை முதல்வர் அஜித்பவார் பல்டி!
மும்பை: மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமா அஜித் பவார். ஆனால் அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து அதிருப்தி அடைந்து வெளிநடப்பு செய்யவில்லை என்றும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே தாம் புறப்பட்டுச் சென்றதாகவும் அஜித் பவார் திடீரென பல்டி அடித்துள்ளார்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதி எந்த நிமிடத்திலும் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் அஜித்பவார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு சொற்பமான தொகுதிகள் கிடைக்கும் நிலை என்பதுடன் அவர் கேட்கும் தொகுதிகளையும் கூட தர பாஜக மறுக்கிறது என்கிறது மகாராஷ்டிரா தேர்தல் களம்.
இதேபோல மகா விகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா- சரத்பவார் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளிடையேயும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில் இரு கூட்டணி கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டு முடிவுகளை அறிவிக்கக் கூடும் என்கிற நிலைமை உள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் துணை முதல்வர் அஜித் பவார் திடீரென கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் மீது அதிருப்தி அடைந்தே அஜித்பவார் வெளிநடப்பு செய்துவிட்டதாக தகவல்கல் காட்டுத் தீயாக பரவியது. மேலும் மகாயுதி கூட்டணியில் இருந்து பாஜகவின் துரோகத்தால் அஜித்பவார் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படப் போகிறார் எனவும் தகவல்கள் பரவ தேசிய அரசியலும் பரபரப்பானது.
இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை அஜித்பவார் சந்தித்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஜித் பவார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தின் அனைத்து முடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகள் மீது எங்களுக்கு எந்த அதிருப்தியுமெஎ இல்லை. அமைச்சரவைக் கூட்ட தேதிக்கு முன்னராகவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால்தான் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நான் புறப்பட்டுச் சென்றேன். ஆகையால் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன் என்பது சரியானது அல்ல என விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications