நான் ராஜா..மகாராஷ்டிராவில் கெத்தாக பாஜக கூட்டணி! கோட்டை நெருங்கும் காங்., கூட்டணி! பி-மார்க் கணிப்பு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பி-மார்க் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்,பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்கள் வரை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. இந்த தேர்தலில் பிரதான கட்சிகள் தவிர, அதிருப்தி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என சுமார் 4000 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில் 6:00 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 9.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை தொடங்கி மாலை வரை அமைதியாக வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பி-மார்க் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக, ஏக்நாத் சிவசேனா, அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி 137 முதல் 157 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 126 முதல் 146 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இரண்டு முதல் 8 இடங்கள் வரை பெறலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில், 145 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில் பி-மார்க் நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி 157 இடங்கள் வரை பெரும் என கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியும் 146 தொகுதிகள் வரை பெறலாம் என்பதால் நிச்சயம் கடுமையான போட்டி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications