சிபில் ஸ்கோரால் நின்றுபோன திருமணம்.. நொந்துபோன மணமகன்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த தாய்மாமன்!
மும்பை: மகாராஷ்டிராவில் மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததன் காரணமாக பெண் வீட்டில் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு ஆரம்பக் கட்ட சடங்குகள் முடிவடைந்த போது, பெண்ணின் தாய்மாமன் மணமகனின் சிபில் ஸ்கோரை பரிசோதனை செய்த போது, மணமகன் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாதது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் ஒருவர் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டுமெனில் அவருக்கு சிபில் ஸ்கோர் முக்கியமானது. இந்த சிபில் ஸ்கோர் ஒருவர் வங்கி கணக்கை பராமரிப்பதில் தொடங்கி, ஈஎம்ஐ-யில் வாங்கிய கடனை சரியாக அடைப்பது வரை பல்வேறு வகைகளில் செயல்படும். எந்த சிக்கலும் இல்லாமல் ஈஎம்ஐ மற்றும் வங்கி கடனை செலுத்தி வந்தால், சிபில் ஸ்கோர் சிறப்பாக இருக்கும்.

Image: AI created
சிபில் ஸ்கோர்
ஆனால் ஈஎம்ஐ-யை சரியான நேரத்தில் முடிக்கவில்லை என்றாலோ, வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறினாலோ சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். குறிப்பாக கல்விக் கடனை அடைக்கவில்லை என்றால், சிபில் ஸ்கோர் அதிகரிக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு அதன் கட்டணத்தை சரியாக கட்டவில்லை என்றால், சிபில் ஸ்கோர் குறைந்துவிடும்.
சிபில் ஸ்கோர் குறையும் பட்சத்தில், அந்த நபரின் கடன் சிக்கலையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் மகாராஷ்டிராவில் மணப்பெண் தனது திருமணத்தை நிறுத்த சிபில் ஸ்கோர் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வழக்கமாக திருமணம் நிறுத்தப்படுவதற்கு காதல், உறவினர்கள், குடிப்பழக்கம், மனப்பொருத்தம், ஜாதகம் உள்ளிட்டவை தான் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது மணப்பெண் தரப்பில் சிபில் ஸ்கோர் பார்க்கப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் கவனத்தை திருப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முர்திஷாபூர் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களின் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அவருக்கு பொருத்தமான பையனை தேடி இருக்கின்றனர். அப்படி ஒரு பையனை பார்த்து, அடுத்தடுத்து திருமண வேலைகள் விரைவாக நடந்திருக்கிறது.
தாய்மாமன் ட்விஸ்ட்
பெண் பார்ப்பது, வீடு பார்ப்பது என்று திருமண வேலைகள் விரைவாக நடந்துள்ளன. ஆனால் திருமணத்தை முடிவு செய்வதற்கு முன்பாக மணப்பெண்ணின் தாய்மாமன் ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். பையனின் சிபில் ஸ்கோரை செக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பையன் வீட்டார் தரப்பில் பான் கார்டு, வங்கி விவரங்கள் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
பெண் வீட்டார் அதிர்ச்சி
இதனை தொடர்ந்து சிபில் ஸ்கோர் செக் செய்யப்பட்ட போது, பூகம்பமே வெடித்துள்ளது. அதாவது பையன் ஏராளமான கடனில் இருந்ததால், அவரின் சிபில் ஸ்கோர் மிகவும் இருந்தது தெரிய வந்துள்ளது. பல்வேறு வங்கிகளிலும் கடன் பெற்றுள்ள மணமகன், அதனை ஒழுங்காக சரியான நேரத்தில் கட்டாததும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியாக சிறப்பாக இல்லாத பையனை நம்பி எங்களின் பெண்ணை கொடுக்க முடியாது என்று பெண் வீட்டார் தரப்பில் நேரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களே எச்சரிக்கை
இதனால் மணமகன் வீட்டில் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக மணமகனின் சம்பளம், வீட்டுப் பின்னணி குறித்து தான் மணமகள் வீட்டில் ஆராயப்படும். ஆனால் சிபில் ஸ்கோர் பார்த்து பெண் வீட்டில் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மணமகள் வீட்டில் எடுத்த முடிவு சரியானதே என்றும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் தங்களின் சிபில் ஸ்கோரை பாதுகாக்க வரும் நாட்களில் பொருளாதார ரீதியான திட்டமிடலில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications