மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்- பெரும் வன்முறை- பாஜக துணை முதல்வர் பதவிக்கு வேட்டு?
மும்பை: மகாராஷ்ரா மாநிலத்தில் மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கல்வி, வேலைவாய்ப்பில் மகாராஷ்டிரா மண்ணின் மக்களான மராத்தா ஜாதியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நீண்டகால போராட்டம். பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடந்தும் மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. இதனாம் மராத்தா சமூக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டம், அன்டர்வாலி என்ற கிராமத்திலும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் மனோஜ் பாட்டீல் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போது பெரும் வன்முறை வெடித்தது. 15 அரசு பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தினர். இதனால் ஜல்னா மாவட்டத்தின் அன்டர்வாலி கிராமமே போர்க்களமானது.
ஆனாம் ஜல்னா மாவட்ட வன்முறையானது மகாராஷ்டிரா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜல்னா வன்முறைகளுக்கு எதிராக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இன்றும் போராட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே ஜல்னா மாவட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று உள்துறை பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
#WATCH | Baramati (Maharashtra): People hold protest over the demand for Maratha reservation. pic.twitter.com/jbqeRmiM06
— ANI (@ANI) September 4, 2023
இதனிடையே மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில் மராத்தா இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு ஏதேனும் ஒன்று வெளியாகலாம் என்கின்றன மும்பை செய்திகள்.
ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 4 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடிக்கிறது; ஹரியானாவில் இந்துத்துவா தீவிரவாதிகள் தொடர் போராட்டம் நடத்துவதால் அங்கும் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications