மகாராஷ்டிரா அமைச்சரவை: இலாகா ஒதுக்கீடு! உள்துறை பட்னாவிஸ் வசம்! நிதி துறையை கைப்பற்றிய அஜித் பவார்!
மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் ஒருவழியாக இன்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகள் இடையேயான குழப்பங்களால் இலாகா ஒதுக்கீடு தாமதமாகி வந்த நிலையில் இன்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி\ 230 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களில் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிரா அமைச்சரவை
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மூத்த தலைவர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல் உட்பட பாஜகவை சேர்ந்த 19 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி மூத்த தலைவர்கள் குலாப்ராவ் பாட்டீல், தாதா பூஸ் உட்பட 11 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே உட்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
43 அமைச்சர்கள்
மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்க முடியும். தற்போது ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர அமைச்சரவையில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சர்களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் ஒரு முஸ்லிம், 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டமன்றக் கூட்டம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா அமைச்சரவை - இலாகாக்கள் ஒதுக்கீடு
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வசம் உள்துறை, சட்டம், நீதித்துறை, எரிசக்தி ஆகிய இலாகாக்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல், கலால் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலானா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்களை உறுதி செய்து அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கட்சிகள் வாரியாக இலாகாக்கள்
வருவாய்த்துறை, நீர்வளம், உயர்கல்வி, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், பால்வளம், வனம், தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி, மீன்வளம் மற்றும் தொழில்துறை பாஜக-வை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை, சுற்றுலா துறை, சுரங்கங்கள், போக்குவரத்து, வேலைவாய்ப்பு உத்தரவாதம், தோட்டக்கலை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் ஏக்நாத ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வி, குடிமைப்பொருள் வழங்கல், விளையாட்டு, சிறுபான்மையினர் மேம்பாடு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, வேளாண் துறை, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications