திடீரென்று வேகம்... அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு... மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் மகாராஷ்டிர அரசு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா குறைந்து வந்தது. இருப்பினும், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மட்டும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது.
பொதுமக்கள் ஊரடங்கு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முயற்சிகளும் பெரியளவு பலன் அளிக்கவில்லை.

கொரோனா பாதிப்பு
குறிப்பாக, மகாராஷ்டிராவில் வைரஸ் பரவல் திடீரென்று பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டிலேயே இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் மராட்டியத்தில் 16,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, வெள்ளிக்கிழமை 15, 817 பேருக்கும் சனிக்கிழமை 15,602 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் மட்டும் தற்போது 23,14,413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Array
மராட்டியத்தில் நேற்று மட்டும் சிகிச்சை பலனிற்றி 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 52,811 பேர் கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். அதேபோல நேற்று மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட 5.88 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை அம்மாநில அரசு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,705 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 79,748 சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் 957 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள மும்பை, நாக்பூர், புனே பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரளா, டெல்லி, ராஜஸ்தான், கோவா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசாதோனை முடிவுகளை மகாராஷ்டிர மாநில அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications