நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சிறப்பு சட்டசபை கூட்டம் தொடக்கம்.. ஆளுநர் உத்தரவு! காரணம் இதுதான்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நாளை பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் இது நடக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு. ஆனால், போதிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்துள்ள பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். எனவே அவர் காபந்து முதல்வராக தொடருகிறார்.

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, இடைக்கால சபாநாயகரை அறிவித்துள்ளார் ஆளுநர் கோஷ்யாரி. பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கும் என ஆளுநர் இன்று மாலை உத்தரவு வெளியிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறப்போவதில்லை. ஆனால், அக்டோபர் 24ம் தேதி மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகிய போதிலும், இதுவரை, எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை. எனவே, காலை 8 மணிக்கு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மும்பையில், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி சார்பில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல்வராக பதவியேற்க உள்ளார். எனவே, இந்த சிறப்பு சட்டசபை கூட்டம் என்பது, எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக மட்டுமே என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications