விஜய் கான்வாய்க்கு டியூன் லைன் தனிப்பாதை.. இது புதிய நடைமுறையா? ஸ்டாலின் காலத்திலேயே தொடங்கிய வரலாறு
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், புதிய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, சினிமா படப்பிடிப்புத் தளங்களுக்குச் சொன்ன நேரத்திற்கு முன்பே வந்து துல்லியமாகத் தன் கடமையைத் தொடங்கும் அதே அசாத்திய ஒழுக்கத்தை, தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கும் கொண்டு வந்துள்ளார் முதல்வர் விஜய்.
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தினமும் காலை 17 கிலோமீட்டர் தூரம் பயணித்து, தலைமைச் செயலகத்திற்கு மிகச் சரியான நேரத்திற்கு அவர் வந்து சேர்வது அரசு அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த தினசரி பயணத்தின் போது கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். "எனது கான்வாய் செல்வதற்காகப் பொதுமக்களின் போக்குவரத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது; மக்களுக்குக் குறைந்தபட்ச இடையூறு கூட ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.
இதன் விளைவாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை 'டியூன் லைன்' (Tune Line) எனப்படும் சிறப்பு மாற்றுப் போக்குவரத்து முறையை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய ஏற்பாட்டின்படி, முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் சாலையின் ஒரு குறிப்பிட்ட தனிப் பாதையில் (Lane) மட்டுமே செல்லும். அதே நேரத்தில், சாலையின் மறுபுறம் மற்றும் இதர பாதைகளில் பொதுமக்களின் வாகனங்கள் வழக்கம்போல் எந்தவொரு தடங்கலும் இன்றிச் செல்ல அனுமதிக்கப்படும். முதலமைச்சருக்காக ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் பழைய விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டமா? சமூக ஊடகங்களின் அதீதப் பரப்புரையும், உண்மைப் பின்னணியும்:
தற்போது சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் 'முதன்முறையாக முதல்வரின் கான்வாய்க்காகப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை', 'இது புதிய முதல்வர் விஜய்யின் முற்றிலும் புதிய அதிரடி உத்தரவு' என்று சிலாகித்து செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், வரலாற்றுப் பூர்வமாகப் பார்த்தால், இது முற்றிலும் புதியதொரு நடைமுறை அல்ல என்பதும், இதற்கான விதையும் அடித்தளமும் கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே போடப்பட்டுவிட்டது என்பதும் தான் நிதர்சனமான உண்மை.
கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, முதலமைச்சரின் கான்வாய் பயணத்தால் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, ஒருமுறை முதலமைச்சரின் வாகன வரிசை கடந்து செல்வதற்காக நீண்ட நேரம் பொதுமக்களின் வாகனங்கள் மறிக்கப்பட்ட விவகாரம் பெரும் பேசுபொருளானது. நீதிபதி ஒருவரே இதை கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2021 அக்டோபர் மாதத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆய்வுக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த நேரடி அறிவுறுத்தலின்படி, பொதுமக்களைத் துன்புறுத்தும் 'விஐபி ட்ராஃபிக் கலாச்சாரத்தை' மாற்றியமைக்க இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, உடனடியாக அரசாணையாகச் செயல்படுத்தப்பட்டன.
போக்குவரத்தை நிறுத்தக் தடை: முதலமைச்சரின் கான்வாய் சாலையில் செல்லும்போது, பொதுமக்களின் வாகனங்களை முழுமையாக நிறுத்தக் கூடாது. வாகனங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதை பின்னர் நீதிமன்றமே முன் வந்து பாராட்டியது.
கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு: பாதுகாப்பு வளையத்தில் இருந்த முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ வாகனங்களின் எண்ணிக்கை 12-லிருந்து பாதியாக, அதாவது 6 வாகனங்களாகக் குறைக்கப்பட்டது.
மேலும், 2018-லேயே சென்னை உயர் நீதிமன்றமும், "விஐபி-க்களின் பயணத்திற்காகப் பொதுமக்களின் போக்குவரத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தக் கூடாது" என்று தெளிவுபடுத்தியிருந்தது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகவே, 2021-ல் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் "பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தவே கூடாது; கான்வாய் ஒரு பாதையில் செல்லும்போது மக்கள் மறுபாதையில் தடையின்றிச் செல்லலாம்" என்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது.
தொடரும் நல்லதொரு நிர்வாக மரபு:
தற்போது முதல்வர் விஜய் எடுத்துள்ள 'டியூன் லைன்' தனிப்பாதை நடவடிக்கையானது, கடந்த 2021-2022 காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அதே மக்கள்நல கொள்கையின் ஒரு மேம்பட்ட, தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட தொடர்ச்சியே தவிர, இது நேற்று முளைத்த புதிய சட்டம் அல்ல.
-
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications