பேரபாயம், 3 நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்.. மோடி அரசு உடனடியாக உதவணும்.. மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தீர்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புமாறு அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள்.
இதன் காரணமாக அம்மாநில அரசு இரவு நேரங்களிலும் மற்றும், வார இறுதி நாட்களிலும் முழு லாக்டவுனை அறிவித்துள்ளது. மேலும், மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

தடுப்பூசிகள் தேவை
அதேபோல மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அம்மாநில அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்குத் தேவையான தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மும்பை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைமை உள்ளதால் மத்திய அரசு விரைவில் தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

14 லட்சம் மட்டும்
தொடர்ந்து பேசிய அவர், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது எங்களிடம் வெறும் 14 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே எங்களால் தடுப்பூசி செலுத்த முடியும். தினசரி ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்றால் உடனடியாக எங்களுக்கு 80 லட்சம் தடுப்பூசி தேவை.

மையங்களை மூடும் நிலை
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். எங்களின் பல தடுப்பூசி மையங்களிலும் தேவையான தடுப்பூசி டோஸ்கள் இருப்பதில்லை. எனவே, பல தடுப்பூசி மையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக எங்களுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

மும்பை தடுப்பூசிகள்
பெரும்பாலான தடுப்பூசிகள் அரசு மையங்களுக்கே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட மும்பை நகர மேயர் கிஷோரி பெட்னேகர், நகரில் இன்னும் சுமார் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாகவும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மும்பை மட்டுமின்றி மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை தடுப்பூசி தீர்ந்துவிடும் என்றும் இது குறித்து மத்திய அரசுக்குத் தெரியும் என்றும் மராட்டியச் சுகாதார துறை முதன்மை செயலாளர் பிரதீப் வியாஸ் குறிப்பிட்டார்.

மராட்டிய கொரோனா தடுப்பூசி
இதுவரை மத்திய அரசிடம் இருந்து மகாராஷ்டிராவுக்கு 1.06 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 88 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3% தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளது. மராட்டியத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக மராட்டியத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தார்.












Click it and Unblock the Notifications