செவ்வாய்கிழமை ரிலீஸ்.. வியாழக்கிழமை ஜெயில்.. "கேங்ஸ்டருக்கு" வேட்டு வைத்த வீடியோ
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயிலில் இருந்து ரீலிஸ் ஆனதை பேரணியாக சென்று கொண்டாடிய கேங்ஸ்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்டியின் மோஸ்ட் வான்டட் கேங்ஸ்டர் ஹர்ஷத் படன்கர். கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் அவர் மீது உள்ளது. மகாராஷ்டிரா பாதுகாப்பு சட்டம், போதை மருந்து உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்த ஹர்ஷத், கடந்த 23ம் தேதி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகியுள்ளார். உற்சாகமடைந்த ஹர்ஷத்தின் ஆதரவாளர்கள், அவர் வெளியானதை கொண்டாடும் விதமாக பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பெத்தேல் நகரில் இருந்து அம்பேத்கர் சௌக் வரை நடந்த இந்தப் பேரணியில் சுமார் 15க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் பங்கேற்றன.

படை பலம் சூழ ஹர்ஷத், எஸ்யூவி காரின் சன் ரூஃப் வழியாக உற்சாகமாக கையசைத்தபடி சென்றுள்ளார். அவரின் ஆதரவாளர்கள், 'அண்ணனுக்கு ஜே’ போன்ற கோஷங்களுடன் உற்சாகமாக பேரணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. கேங்ஸ்டர் ஹர்ஷத்தின் ஆதரவாளர்கள், 'இதுதான் கம்பேக்’ என்ற கேப்ஷனில் பேரணி வீடியோ ரீல்ஸை பகிர்ந்தனர். கடைசியில் அது காவல்துறையின் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து பொது இடத்தில் அனுமதியில்லாமல் பேரணி நடத்தி, மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்த குற்றத்துக்காக ஹர்ஷத்தை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். ஹர்ஷத்துடன், அவரின் ஆதரவாளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணியில் பங்கேற்ற வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ரீலிஸ் ஆன கேங்ஸ்டர் ஆர்வகோளாறால் வியாழக்கிழமையே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications