துணிச்சல் இருக்கா? ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்தவ தேசியவாதிங்கன்னு சொல்லுவீங்களா? ஜெய்சங்கர் பரபர கேள்வி
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை மறைமுகமாக சாடும் வகையில் ஜெய்சங்கர் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.
மும்பை: பாஜகவை இந்து தேசியவாதி (Hindu Nationalist) எனக் கூறும் ஊடகங்கள், ஐரோப்பிய நாடுகளின் கட்சிகளை கிறிஸ்தவ தேசியவாதி (christian nationalist) என்று ஏன் கூறுவதில்லை? என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வியெழுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ள சூழலில், ஜெய்சங்கர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, சீனா - இந்தியா விஷயத்தில் ராகுல் காந்தி பல்வேறு உண்மைகளை மறைத்து, பொய்களை அடுக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆவணப்பட சர்ச்சை
பிபிசி அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம், இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், இந்தியாவில் பாஜக முன்னெடுக்கும் அரசியல் குறித்தும் இந்த ஆவணப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த ஆவணப்படம் பொய் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியாவில் இதனை திரையிடுவதற்கும், பார்ப்பதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி சில அமைப்புகள் இந்த ஆவணப்படங்களை திரையிட்டு வருகின்றன. இதுதொடர்பாக பல கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"கிறிஸ்தவ தேசியவாதி"
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவை ஆளும் பாஜகவை 'இந்து தேசியவாதி' எனப் பெயரிட்டு அழைக்கின்றன. ஆனால், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ள கட்சிகளை 'கிறிஸ்தவ தேசியவாதி' எனக் கூறுவதில்லை. இதுபோன்ற பெயர்கள் எங்களுக்கு (பாஜக) மட்டுமே சூட்டப்படுகின்றன.

"எங்களுக்கு பெருமைதான்"
அப்படி 'இந்து தேசியவாதி' எனக் கூறுவதில் எங்களுக்கு ஒன்றும் சிறுமை அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்களுக்கு அது பெருமைதான். கடந்த 10 ஆண்டுகால இந்தியாவில் அரசாங்கமும், அரசியலும் தேசியவாதத்தையே பேசுகின்றன; வலியுறுத்துகின்றன. எனவே, இதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. தேசியவாதம் ஒன்றே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்.

பொய் கூறும் ராகுல்
இன்னொரு விஷயத்தை பற்றி இங்கு பேசியே ஆக வேண்டும். அது, இந்தியா - சீனா விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரஸும் தொடர்ந்து கூறி வரும் பொய்களை பற்றியதுதான். இந்தியாவுக்கு சொந்தமான 26 முதல் 65 பகுதிகளை நிலங்களை சீனா கைப்பற்றியதாக ராகுல் காந்தி கூறி வருகிறார். அது ஏதோ இப்போது நடந்ததை போல அவர் பேசுகிறார். ஆனால், 1962-இல் அப்போதைய பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் நடந்த போரில் சீனா கைப்பற்றிய பகுதிகள் அவை. ஆனால், அதுகுறித்து அவர் பேச மாட்டார். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.












Click it and Unblock the Notifications