போரில் ஈடுபட போகிறோம்.. மும்பையை மிரள வைத்த ஸ்டாலின்.. 'மோடிக்கு நன்றி' சொன்னது தான் ஹைலைட்
மும்பை: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சர்வாதிகார ஆட்சியினை நடத்தி வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அதேநேரம் இந்தியா கூட்டணி தொடர்பாக இன்றைய மும்பை கூட்டத்தில் முக்கியமான பல விஷயங்களை பேசி உள்ளார். அவற்றை இப்போது பார்ப்போம்.
மும்பையில் இன்று நடந்த இந்தியா கூட்டணி கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பட்னாவில் 19 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அங்கு முதல் கூட்டத்தை நடத்தினோம். முதல் கூட்டத்தை பொறுத்தவரை ஒற்றுமையாக இருந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அதை தொடர்ந்து இரண்டாவது கூட்டத்தை பெங்களூருவில் நடத்தினோம். அதில் இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை சூட்டி அந்த பணியை தொடங்கினோம்.
மூன்றாவதாக இந்த மும்பையில் 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து வலிமை மிக்க கூட்டணியாக இதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். நடைபெற்றுக் கொண்டிருக்க பாரதிய ஜனதா கட்சி ஆட்சி எப்படி சர்வாதிகாரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
அதில் குறிப்பாக பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள், எங்கே போனாலும், அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது தனிப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கு போனாலும், அங்கெல்லாம் இந்த 9 வருசமாக செய்த சாதனைகளை பற்றி சொல்ல முடியாமா, சிறந்த ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆளாகி, நாங்க அமைத்திருக்கிற 'இந்தியா' கூட்டணி பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆக சிறந்த பப்ளிகேசன் ஆபிஸராக பிரதமரே செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் எந்த சாதனைகளும் இல்லை. நாளுக்கு நாள் இந்த ஆட்சி மக்களிடையே வேண்டாம் என்ற மனநிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
இந்த கூட்டத்தை பொறுத்தவரை இது திருப்திகரமான கூட்டமாக மட்டுமில்லாமல் திருப்புமுனை கூட்டமாக அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சியினுடைய கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது.இதுவரை இந்தியாவில் காண முடியாத சர்வாதிகார ஆட்சியை இன்றைக்கு நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். அண்மையில் 7 லட்சம் கோடி ரூபாய் தொடர்பாக சிஏஜி ரிப்போர்ட் கொடுத்திருக்கக்கூடிய விவரம் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும்.
அதுபற்றி பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் வாய் திறந்து பதில் சொல்லவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கும் சுதந்திரம் கிடையாது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என அரசியல் எதிரிகளை எல்லாம் அச்சுறுத்துகிற ஏவல் அமைப்புகளாக இந்த அமைப்புகளை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாங்கள் எல்லாம் இன்றைக்கு தனித்தனியாக கட்சிகளாக இருந்தாலும், நாட்டை காப்பாற்ற ஒன்று சேர்த்திருக்கிறோம். அரசியல் லாபத்திற்காக ஒன்று சேர்த்திருக்கிறோம் என்று யாரும் தயவு செய்து நினைக்காதீங்க.. இந்தியாவின் மாண்பை காக்க, இந்தியாவின் மதசார்பின்மையை காப்பாற்றுவதற்காக, இந்தியாவினுடைய சமூக நீதியை காப்பாற்றுவதற்காக நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
நாங்கள் எல்லாம் ஒரு பெரிய போரில் (தேர்தலில்) சேர்ந்து ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் எல்லாம் பக்கபலமாக துணை நிற்க வேண்டும் என்று என் அன்பான வேண்டுகோளை எடுத்து வைக்கிறேன். இந்தகூட்டத்தில் கலந்து கொண்டதற்காக வாய்ப்பு கிடைத்தற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மும்பை கூட்டத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications