சட்டென கார் மோதியதால் பெண் பலி.. மும்பையில் விபத்தை ஏற்படுத்திய மகன்.. ஷிண்டே சிவசேனா தலைவர் கைது!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் நடந்த போர்ஷே கார் விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்துள்ளது. ஷிண்டே சிவசேனாவை சேர்ந்த தலைவர் ஒருவரின் மகன் இந்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி போர்ஷே கார் ஓட்டி வந்த இளைஞர் மிக மோசமான விபத்தை ஏற்படுத்தினார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் விபத்து: இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் இன்று காலை இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. அப்பகுதியில் இன்று காலை அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று அங்குச் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் மோதிய விபத்தில், அதில் சென்று கொண்டு பெண் தூக்கி வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சித் தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய 24 வயதான மிஹிர் ஷா இப்போது தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஷிண்டே சிவசேனா: இதையடுத்து மிஹிர் ஷாவின் தந்தையும், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே சேனாவின் துணைத் தலைவருமான ராஜேஷ் ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ கார் ராஜேஷ் ஷா பெயரில் இருப்பதால் போலீசார் அவரை கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜேஷ் ஷாவின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பெண் வொர்லி பகுதியின் கோலிவாடா பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த பெண் இன்று காலை வீட்டிற்கு மீன் வாங்கிக் கொண்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை காலை 5.30 மணியளவில் அட்ரியா மால் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. புனே கார் விபத்தில்.. அப்பா, தாத்தாவை தொடர்ந்து சிறுவனின் தாயும் கைது!
என்ன நடந்தது: இவர்கள் சென்று கொண்டிருந்த டூவீலர் மீது கார் மோதியதில் அதில் சென்று கொண்டிருந்த பிரதீப் நகாவ் (50) மற்றும் அவரது மனைவி காவேரி நகாவா (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனில்லாமல் காவேரி நகாவா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காரை மிஹிர் ஷாவை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரை கைது செய்ய மும்பை போலீஸ் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்தபோது மிஹிரின் டிரைவரும் அவருடன் காருக்குள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஷிண்டே: இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறிய முதல்வர் ஷிண்டே, இந்த வழக்கு பாரபட்சம் இல்லாமல் விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மும்பையில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நான் போலீசாரிடம் பேசினேன்.. சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவருமே சமம்" என்றார்.












Click it and Unblock the Notifications