பயணிகள் கப்பல் மீது மோதிய கடற்படை கப்பல்.. மும்பை கடலில் 13 பேர் இறந்தது எப்படி? சோக தகவல்
மும்பை: மும்பையில் 85 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் மீது கடற்படைக்கு சொந்தமான கப்பல் வேகமாக மோதியதில் 13 பேர் இறந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில தலைநகராக மும்பை விளங்கி வருகிறது. மும்பையில் இருந்து எலிஃபெண்டா தீவுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பயணிகள் கப்பலில் தினமும் ஏராளமான மக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று மாலையில் ‛நீல்கமல்' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் மும்பையில் இருந்து எலிஃபெண்ட் தீவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த படகில் மொத்தம் 85 பேர் இருந்தனர்.
இந்த பயணிகள் கப்பல் ஊரான் மற்றும் கராஞ்சா இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது பயணிகள் கப்பல் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் வேகமாக பயணித்தது. கடலில் அடிக்கடி இந்திய கடற்படை கப்பல் என்பது ரோந்து செல்லும். அந்த வகையில் பயணிகள் கப்பல் அருகே கடற்படைக்கு சொந்தமான கப்பல் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது.
இந்த கடற்படை கப்பல், பயணிகள் கப்பலை நோக்கி வேகமாக வந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கடற்படையின் கப்பல், பயணிகள் கப்பல் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 கப்பல்களும் தண்ணீரில் மூழ்க தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கடற்படையினர், கடலோர காவல் படையினர், உள்ளூர் மீனவர்கள் விரைந்து மீட்பு பணியை தொடங்கினர்.
11 கடற்படை படகுகள், மூன்று மரைன் போலீஸ் படகுகள் மற்றும் ஒரு கடலோர காவல்படை கப்பல் உள்ளிட்டவை தேடுதல் பணியை தொடங்கின. அதேபோல் 4 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டது. கப்பல் கவிழ்ந்த இடத்துக்கு படகில் விரைந்து அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இரவு 7.30 மணி நிலவரப்படி மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இறந்த 13 பேரில் 10 பேர் பொதுமக்கள். 3 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே தான் பயணிகள் கப்பல் மீது கடற்படைக்கு சொந்தமான கப்பல் வேகமாக வந்து மோதியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications