நீங்க சிவசேனா கூட கூட்டணி வைக்கலாம்.. நாங்க பாஜக ஆட்சியில் இணையக் கூடாதா? சரத்பவாருக்கு நறுக் கேள்வி
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்துத்துவா கொள்கையை பேசும் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்; சிவசேனாவை போல செயல்படும் பாஜக ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவது மட்டும் எப்படி தவறானதாக இருக்க முடியும்? என அஜித்பவார் அணியின் பிரபுல் பட்டேல் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. அஜித் பவார் தலைமையில் பிரபுல் பட்டேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆளும் பாஜக அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். அஜித் பவார், பாஜக அரசில் துணை முதல்வராகி இருக்கிறார். மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமையிலான அதிருப்தியாளர்களை அடுத்தடுத்து சரத்பவார் தரப்பு நீக்கி வருகிறது. மேலும் அஜித் பவார் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் சரத்பவார் தரப்பு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் அஜித் பவார் தரப்பு , பாஜக அரசில் இணைந்ததை நியாயப்படுத்தி வருகிறது. அதாவது நாகாலாந்து மாநிலத்தில் பாஜக பங்கேற்றிருக்கும் கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என சரத்பவார் அறிவித்தார். அதாவது பாஜக ஆட்சிக்கு நாகாலாந்தில் ஆதரவு தந்தவர் சரத்பவார்; மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவது மட்டும் எப்படி தவறாக இருக்கும்? என்கிறது அஜித் பவார் தரப்பு.
தற்போது அஜித்பவார் அணியின் பிரபுல் பட்டேல் மற்றொரு கேள்வியை முன்வைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்தது இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக கொண்ட சிவசேனா. அந்த சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்த சிவசேனா போலவே செயல்படக் கூடிய பாஜக அரசுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இது எப்படி தவறாகும்? என்கிறார் பிரபுல் பட்டேல்.
மேலும் மக்களின் நலன் கருதி பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோலதான் நாங்கள் பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதையும் மக்கள் நலன் கருதியே பார்க்க வேண்டும் என்றார் பிரபுல் பட்டேல்.












Click it and Unblock the Notifications