மலிவான விளம்பரம்! அருவருப்பு-அவமானம்! நடிகை பூனம் பாண்டேவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மும்பை: தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாக பொய் செய்தி பரப்பிய நடிகை பூனம் பாண்டேவின் செயல் மோசமானது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று முன் தினம் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் இதனால் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்துவிட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

அவர் போட்டிருந்த பதிவில் இன்று காலை எங்களுக்கு மோசமான விடியலாக இருந்தது. எங்களது அன்பான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் தான் பழகிய எல்லோரிடமும் தூய அன்புடனும் கருணையுடனும் இருந்தார். மிகவும் அன்பான நபர் அவர். இந்த துயர நேரத்தில் நாங்கள் அவரை அன்புடன் நினைவுகூர்கிறோம் என அந்த பதிவில் போடப்பட்டிருந்தது.
32 வயதான பூனம் பாண்டேவின் இந்த போஸ்ட் வைரலானது. திரைத்துறையினர் ரசிகர்கள் என அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தொடங்கினர். இந்த நிலையில்தான் அவர் நேற்று சமூகவலைதள பக்கத்தில் மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது அதில் பூனம் பாண்டே பேசியிருந்தார். இறந்தவர் எப்படி உயிரோடு வந்தார் என்ற அதிர்ச்சியுடன் அந்த வீடியோவை பார்த்த போது நான் உயிருடன்தான் இருக்கிறேன் என ஆரம்பித்தார். அப்படியென்றால் பிரபலங்கள் உயிரிழந்துவிட்டதாக பொய் செய்தியை பரப்பும் யாரோ சில விஷமிகள் இந்த வேலையை பார்த்துள்ளதாக நினைத்த போதுதான் அந்த செய்தியை பரப்பியதே பூனம் பாண்டே என தெரியவந்தது.
அவர் தொடர்கையில் நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. துரதிருஷ்டவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களால் இதே போல சொல்ல முடியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்ததாகவும் தன்னை எல்லோரும் மன்னிக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அது போல் மற்றொரு வீடியோவில் எனது இறப்புச் செய்தி அறிந்து கண்ணீர் சிந்தியவர்களுக்காக வருந்துகிறேன். எனது நோக்கம் நாம் அதிகம் பேசப்படாத கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் குறித்து பேச வைப்பதுதான் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பூனம் பாண்டேவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது மோசமான பப்ளிசிட்டி ஸ்டன்ட். விழிப்புணர்வு ஏற்படுத்த எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது இது போன்ற மலிவான விளம்பரம் அருவருப்பானதாகவும் அவமானகரமானதாகவும் இருப்பதாக கூறியுள்ளனர். இது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் மோசடி. யாராவது புகார் செய்தால் சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக் கூடியதுதான். இதனால் இறந்ததாக பப்ளிசிட்டி செய்திருப்பது அந்த நோய் குறித்து தவறான எண்ணத்தையே ஏற்படுத்துகிறது என விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications