"பாஜக மீண்டும் வெல்லுமா என தெரியவில்லை.." நிதின் கட்கரி அடுத்து சொன்னது ரொம்பவே முக்கியம்
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போதே பாஜக தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கு நாக்பூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, 4வது முறையாக பாஜக வென்று மத்தியில் ஆட்சியை அமைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் இப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியே நடந்து வருகிறது. அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆகியவை ஆட்சியில் உள்ளது.

மகாராஷ்டிர தேர்தல்: அங்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், நவ. முதல் வாரம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சில கருத்துகளைத் தெரிவித்தார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, "நாங்கள் 4வது முறையாக வென்று மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அத்வாலேவுக்கு அமைச்சரவையில் ஒரு இடம் கண்டிப்பாகக் கிடைக்கும்" என்று கூறினார்.
நிதின் கட்கரி: மேலும், இதை விளையாட்டாக மட்டுமே சொன்னதாகக் குறிப்பிட்ட நிதின் கட்கரி, இல்லையென்றால் இதற்கே வேறு விதமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்வார்கள் என்று சொல்லி மேடையிலேயே சிரித்தார். நிதின் கட்கரியின் இந்த கருத்துகளைக் கேட்டு அத்வாலே உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தனர். இதனால் அங்கு மேடையே கலகலப்பானது.
இந்தியக் குடியரசுக் கட்சியின் (ஆர்பிஐ) தலைவரான அத்வாலே இதுவரை மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிதின் கட்கரிக்கு பிறகு பேசிய ராமதாஸ் அத்வாலே, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே 4வது முறை அமைச்சராகத் தொடர முடியும் என ஜாலியாக கூறினார். இருவரது பேச்சும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ராம்தாஸ் அத்வாலே: முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிர தேர்தலுக்கான தங்களின் திட்டத்தை விளக்கினார். ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், "மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணியில் உள்ள எங்கள் கட்சிக்குக் குறைந்தது 10 முதல் 12 இடங்கள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் 18 இடங்களை லிஸ்ட் போட்டு இருக்கிறோம்.
அதை விரைவில் கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வோம். இதில் இருந்து எங்களுக்குக் குறைந்தது 10 முதல் 12 சீட் கிடைக்கும் என நம்புகிறேன். பாஜக, சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகள் தங்களின் ஒதுக்கீட்டில் இருந்து தலா 4 இடங்களை எங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும். ஷிண்டே - பாஜக கூட்டணி அமைந்த போதே எங்களுக்கு அமைச்சரவையில் இடம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அஜித் பவாரும் ஆட்சியில் கை கோர்த்தால் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் இந்த முறை நாங்கள் கேட்கும் சீட்களை ஒதுக்குவார்கள் என நம்புகிறோம்" என்றார்.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சீட்கள் உள்ளன. அதில் 145 இடங்களில் வெல்லும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும். பாஜக- ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் காங்கிரஸ், தாக்ரே சிவசேனா, சரத் பவார் என்சிபி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications