"மசூதிக்குள் புகுந்து தாக்குதல்.." நெருங்கும் மகாராஷ்டிரா தேர்தல்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
மும்பை: மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே இஸ்லாமிய சமூகத்தினர் குறித்து சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இது பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிதிஷ் ரானே மீது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ நிதிஷ் ரானே சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

நிதிஷ் ரானே: கடந்த ஞாயிற்றுக்கிழமை நிதிஷ் ரானே அகமதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீராம்பூர் மற்றும் டோப்கானா பகுதிகளில் இரண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு இந்து சாமியார் மஹந்த் ராம்கிரி மகாராஜுக்கு ஆதரவாக அவர் பேசினார்.. இந்த ராமகிரி மகாராஜ் தான் கடந்த மாதம் இஸ்லாமிய இறைத் தூதர் முகமது நபிக்கு எதிராக சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில் தான் அங்கே நிதிஷ் ரானே, "ராமகிரி மகாராஜுக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால் நாங்கள் உங்கள் மசூதிக்குள் நுழைந்து ஒவ்வொருவராக அடிப்போம். எதாவது பேசுவதற்கு முன்பு இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அங்கு ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவிய நிலையில், நிதிஷ் ரானேவின் இந்த பேச்சைப் பலரும் கண்டித்தனர்.
யார் இவர்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண் ரானேவின் மகன் தான் இந்த நிதிஷ் ரானே. இவர் இப்போது மகாராஷ்டிரா எம்எல்ஏவாக இருக்கிறார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு மீது நடக்கும் வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகைில் இந்து அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் பேசும் போது தான் நிதிஷ் இந்த சர்ச்சை கருத்துகளைக் கூறினார்.
நிதிஷின் இந்த பேச்சை அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது. மும்பை காங்கிரஸ் தலைவர் பேராசிரியர் வர்ஷா கெய்க்வாட் இது குறித்து போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார்.. இந்த விவகாரத்தில் வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், "நிதேஷ் ரானே மற்றும் பிரசாத் லாட் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து இதுபோன்ற சமூக விரோத கருத்துகளைக் கூறி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
புகார்: ராமகிரி மகாராஜ் கருத்துகளும் இரு தரப்பிற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.. மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதும், சட்டம் ஒழுங்கை காப்பதும் போலீஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. ஆளும் கட்சியில் இருப்பதாலேயே இவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கடுமையாகச் சாடினார்.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், நிதிஷ் ரானேவின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து இஸ்லாம் சமூகத்தினர் மீது வெறுப்பைப் பரப்பும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குத் திட்டமிட்டு வகுப்புவாத வன்முறையை உருவாக்க பாஜக முயல்வதாக மஜ்லீஸ் கட்சி விமர்சித்துள்ளது.
விளக்கம்: இந்தச் சூழலில் நிதிஷ் ரானே தனது பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தக் கூட்டம் மஹந்த் ராம்கிரி மகாராஜுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது. முகமது நபி குறித்து ராம்கிரி மகாராஜ் கூறிய கருத்தில் தவறு இல்லை. ஏற்கனவே அதைப் பல முஸ்லிம் அறிஞர்களின் கூறியுள்ளனர். அதைத் தான் ராமகிரி மகாராஜ் கூறினார். அப்படி இருக்கும் போது ராமகிரி மகாராஜை ஆதரித்தாலே கொலை மிரட்டல்கள் வருகிறது. இதன் காரணமாகவே இந்துக்கள் பயப்படக்கூடாது என்பதற்காக நான் அந்த தொனியில் பேசினேன்" என்று விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications